புதன், 3 மார்ச், 2021

அணிகள்- திருக்குறள்

 அணிகள்

பக்கம் 87

உவமை அணி

அணி இலக்கணம்:

 உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள உவம உருபு ஆகிய இம்மூன்றும் வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

எடுத்துக்காட்டு:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

அணி விளக்கம்:

உவமை: தன்னைத் தோண்டுபவரையும் நிலம் தாங்குகிறது.

உவமேயம்: தன்னை இகழ்பவரையும் பொறுத்தல் வேண்டும்.

உவம உருபு: போல

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுத்தல் தலை சிறந்தது.  இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வந்துள்ளதால், இஃது உவமை அணி ஆகும்.

மற்றொரு எடுத்துக்காட்டு:

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று.


சொற்பொருள் பின்வருநிலையணி

அணி இலக்கணம்:

செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

எடுத்துக்காட்டு:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

அணி விளக்கம்:

இப்பாடலில், 'செல்வம்' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து செல்வம் என்னும் ஒரே பொருளையே தருகிறது. எனவே இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.


மற்றும் ஒரு எடுத்துக்காட்டு:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.


ஏகதேச உருவக அணி

அணி இலக்கணம்:

செய்யுளில் பயின்று வரும் இரு பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணியாகும்.

எடுத்துக்காட்டு: 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.

அணி விளக்கம்: 

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமாக அமைவது, அவரது செயல்களே ஆகும். அவரது செயல்களே 'உரைகல்' போன்றது. 

இங்கு, ஒருவரின் செயல்களை 'உரைகல்' என்று உருவகப்படுத்திய வள்ளுவர், அவரின் பெருமையைத் 'தங்கம்' என்றும், அவரின் சிறுமையை 'வெண்கலம்' என்றும் உருவகப்படுத்தாமல் விட்டுவிட்டார்.

இவ்வாறு ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக