ஒன்பதாம் வகுப்பு இயல் 1,2
உரிய விடையைத் தேர்வு செய்க
குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க
வங்கம், மானு, தாழிசை, பிறவினை
தமிழ்விடு தூது______ என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது
சிற்றிலக்கியம்
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக
மூன்று, நூறு, பத்து, எட்டு
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே- எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே-- இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்….
மோனை, எதுகை, இயைபு
அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கண குறிப்பு…
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன?
கீழே
நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
புலரி
பொருத்தமான விடையைத் தேர்க
நீரின்றி அமையாது உலகு- திருவள்ளுவர்
நீரின்றி அமையாது யாக்கை- ஔவையார்
மாமழை போற்றுதும்- இளங்கோவடிகள்
அ, ஆ, இ
பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்தில் இருந்து விரைவாக_______.
அவன் பையன் பள்ளியில் இருந்து இன்னும்_________.
வந்துவிட்டான், வரவில்லை
மல்லல் மூதூர் வயவேந்தே-கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
வளம்
மொழிபெயர்க்க
Linguistics -மொழியியலாளர்
Literature -இலக்கியம்
Philologist-தத்துவவியலாளர்
Polyglot --பன்மொழிப் புலவர்
Phonologist-ஒலியியலாளர்
Phonetics -ஒலிப்பியல்
Every flower is a soul blossoming in nature -ஒவ்வொரு மலரும் இயற்கையில் மலரும் ஓர் ஆன்மா
Sunset is still my favourite colour and rainbow is second -வானவில்லை விட கருப்புதான் எனக்கு இன்றும் பிடித்த நிறம்
An early morning walk is blessing for the whole day-அதிகாலை நடைப்பயிற்சி நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தருகிறது
Just living is not enough…one must have Sunshine, freedom and a little flower.-உயிர் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல. வாழ்வதற்கு நம்பிக்கை ஒளி, சுதந்திரக் காற்று மற்றும் அன்பு நீர் ஆகியவை அவசியம்.
கலைச்சொல் தருக
Conical stone -குமிழிக் கல்
Water management -நீர் மேலாண்மை
Irrigation technology -பாசனத் தொழில்நுட்பம்
Tropical Zone –வெப்பமண்டலம்
Morpheme-உருபன்
Phoneme-ஒலியன்
Comparative grammar -ஒப்பிலக்கணம்
Lexican-பேரகராதி
அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி கோடிட்ட இடங்களில் எழுதுக
இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கிறது
வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்து கொள்வாள்
உலகில் 3000 மொழிகள் பேசப்படுகின்றன
குழந்தைகள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர்
தவறுகளை திருத்திக் கொள்
தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க
இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
கல்லாடம் படித்தவரோடு மல்லாடாதே
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
அகராதியில் காண்க
நயவாமை- விரும்பாமை
கிளத்தல் -சொல்லுதல்
கேழ்பு -நன்மை
செம்மல்- சிறந்தோன்
புரிசை- மதில்
கந்தி -வாசனை
நெடில் -மூங்கில்
பாலி -ஆலமரம்
மகி- பூமி
கம்புள்- வானம்பாடி
கைச்சாத்து- கையெழுத்து
தன்வினையைப் பிறவினையாக மாற்றுக
நான் திடலில் ஓடினேன்-திடலில் மிதிவண்டியை ஓட்டினேன்.
காவியா வரைந்தாள் -காவியா வரைய வைத்தாள்
கவிதை மழையில் நனைந்தேன் -கவிதை மழையில் நனைய வைத்தேன்
இலை அசைந்தது -இலையை அசைத்தேன்
மழைநீர் கடலில் சேர்ந்தது- மழைநீர் கடலில் சேர்த்தது.
பிழை நீக்கி எழுதுக
சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தி கொண்டு தான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்
மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்..
மழையே பயிர்க் கூட்டமும் உயிர்க் கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது
நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்
சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்
பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க
நெல்லுக்கு பாய்கின்ற தண்ணீர் புல்லுக்கும் பாய்வது போல புதுமைப்பெண் உதவித்தொகை ஏழை மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் செல்வந்த மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் என்பதைப் போல ஆசிரியர் வழங்கும் தண்டனைகள் மாணவர்களை நல்வழிப்படுத்தும்.
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் என்பதைப் போல நாள்தோறும் அன்பாய்க் கூறும் அறிவுரைகள் கொடியவர்களையும் நல்வழிப்படுத்தும்.
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது என்பதைப் போல ஆடம்பர வாழ்க்கைமுறை மனிதத்தை அழித்திடாது.
சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக
அரிசி போடுகிறேன்-நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
மழை பெய்தது- நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை நெடுநேரம் பெய்தது.
வானவில்லைப் பார்த்தேன்- காலைப் பொழுதில் மேற்கு திசையில் அகன்ற வானத்தில் அழகுமிக்க வானவில்லைப் பார்த்தேன்.
குழந்தை சிரித்தது- நேற்று பேருந்துப் பயணத்தின்போது என்னைக் கண்ட குழந்தை அழகாய்ச் சிரித்தது.
எறும்புகள் போகின்றன-மழைக்காலத்திற்காக உணவு தேடி எறும்புகள் வரிசை வரிசையாகப் போகின்றன.
படம் வரைந்தான்-என் நண்பன் உலகச் சுற்றுச்சூழல் நாள் விழா போட்டிக்காக அழகான இயற்கைக் காட்சிப் படம் வரைந்தான்.
வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி முதல் வினைகளைத் துணை வினைகளாக மாற்றுக
பார்த்தேன்-எழுதிப் பார்த்தேன்
கொடுத்தார்-எழுதிக் கொடுத்தார்
நடந்தான்-பார்த்து நடந்தான்.
சேர்ந்தார்-வந்து சேர்ந்தார்.
அமைத்தோம்-கட்டியமைத்தோம்.
வினையடிகளை முதல் வினையாகவும் துணை வினையாகவும் அமைத்துத் தொடர்களை உருவாக்குக
வை-கீழே வைத்தான்
அவன் பாடவைத்தான்.
வா-அவன் வந்தான்
அவன் சென்று வந்தான்
போ-அவன் போனான்
அவன் வந்து போனான்
செய்-அவன் செய்தான்
அவன் வரச்செய்தான்
மாற்று-அவன் உடை மாற்றினான்
அவன் உருமாற்றினான்.
இரு-அவன் இருந்தான்
அவன் சென்றிருந்தான்
கொடு-அவன் கொடுத்தான்.
அவன் பேச்சுக்கொடுத்தான்
கொள்-அவன் வெற்றி கொண்டான்
எழுதிக் கொண்டான்
எழுது-அவன் எழுதினான்
அவன் பார்த்து எழுதினான்
விடு-அவன் உள்ளே விட்டான்
அவன் பார்த்துவிட்டான்
போடு-கீழே போட்டான்
அவன் அளந்துபோட்டான்
கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கு ஏற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க
நான் வந்தேன் .
நான் வருகிறேன்.
நான் வருவேன்.
நாங்கள் வந்தோம்.
நாங்கள் வருகிறோம்.
நாங்கள் வருவோம்.
நீ வந்தாய்
நீ வருகிறாய்
நீ வருவாய்
நீங்கள் வந்தீர்கள்
நீங்கள் வருகிறீர்கள்
நீங்கள் வருவீர்கள்
அவன் வந்தான்
அவன் வருகிறான்
அவன் வருவான்
அவள் வந்தாள்
அவள் வருகிறாள்
அவள் வருவாள்
அவர் வந்தார்
அவர் வருகிறார்
அவர் வருவார்
அவர்கள் வந்தார்கள்
அவர்கள் வருகிறார்கள்
அவர்கள் வருவார்கள்
அது வந்தது
அது வருகிறது
அது வரும்
அவை வந்தன
அவை வருகின்றன
அவை வரும்
தொடர்களை மாற்றி உருவாக்குக
பதவியை விட்டு நீக்கினான் (இத்தொடரைத் தன்வினை தொடராக மாற்றுக)
பதவியை விட்டு நீங்கினான்.
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.
உண்ணப்படும் தமிழ்த்தேனே-இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக.
உணவாகும் தமிழ்த்தேனே!
திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர்.(இத்தொடரைச் செய்யப்பட்டு வினைத் தொடராக மாற்றுக)
திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது
நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார்- இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக
நிலவன் சிறந்த பள்ளியில் படிக்க வைத்தார்.
சொற்களைத் தொடர்களாக மாற்றுக
மொழிபெயர்-தன்வினை, பிறவினை தொடர்களாக.
மொழிபெயர்த்தார்.
மொழிபெயர்க்க வைத்தார்
பதிவு செய்-செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்களாக.
பதிவு செய்தார்.
பதிவு செய்யப்பட்டது
பயன்படுத்து-தன்வினை, பிறவினை தொடர்களாக.
பயன்படுத்தினார்.
பயன்படுத்த வைத்தார்.
இயங்கு-செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்களாக.
இயங்கியது.
இயக்கப்பட்டது.
பொருத்தமான செயப்படு பொருள் சொற்களை எழுதுக
தமிழ் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது.
நாம் தமிழ் இலக்கிய நூல்களை வாங்க வேண்டும்.
புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன
நல்ல நூல்கள் நம்மை நல்வழிப்படுத்துகின்றன.
பொருத்தமான பெயரடைகளை எழுதுக
எல்லோருக்கும் இனிய வணக்கம்
அவன் நல்ல நண்பனாக இருக்கிறான்
பெரிய ஓவியமாக வரைந்து வா
கொடிய விலங்கிடம் பழகாதே
பொருத்தமான வினையடைகளைத் தேர்வு செய்க
ஊர்தி மெதுவாகச் சென்றது
காலம் வேகமாக ஓடுகிறது
சங்க இலக்கியம் வாழ்க்கையைப் அழகாகக் காட்டுகிறது
இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் பொதுவாகக் காட்டு.
அடைப்புக்குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.
நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர் (வினா தொடராக)
நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா?
இசையின்றி அமையாது பாடல் (உடன்பாட்டுத் தொடராக)
இசையோடு அமைவது பாடல்.
நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளை தொடராக)
நீ இதைச்செய்.
வேர்ச் சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக
தா (உடன்பாட்டு வினைத் தொடர், பிறவினைத் தொடர்)
தந்தேன்.
தருவித்தேன்.
கேள் (வினாத் தொடர்)
கேட்பாயா?
கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர்)
இல்லாதவருக்குக் கொடுக்க வேண்டும்.
இல்லாதவருக்குக் கொடு.
பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டு வினைத் தொடர், பிறவினைத் தொடர்)
பார்த்தான்.
பார்க்கப்பட்டது.
பார்க்க வைத்தான்.
பொருத்தமான துணை வினைகளைப் பயன்படுத்துக
மனிதனையும் விலங்குகளையும் வேறுபடுத்துவது மொழியாகும்
திராவிட மொழிகள் சில பொதுப் பண்புகளை பெற்றிருக்கின்றன
காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் மொழி தமிழ்
என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்க மாட்டார்களா என்று தேடிப்பார்த்தேன்.
கீழ்க்காணும் துணை வினைகளைப் பயன்படுத்தி புதிய தொடர்களை எழுதுக
வேண்டும்- படிக்க வேண்டும்
பார் -உற்றுப் பார்
உள் -வீட்டினுள் செல்
வா -உள்ளே வா
விடு-உள்ளே விடு.
பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக
பிளாக் போர்டு -கரும்பலகை
பேனா -தூவல்
பென்சில் -கரிக்கோல்
நோட்டு-குறிப்பேடு
ஹலோ -வணக்கம்
டென் இயர்ஸ் -பத்து ஆண்டுகள்
மல்டி நேஷனல் கம்பெனி -பன்னாட்டு நிறுவனம்
ப்ராஜெக்ட் மேனேஜர் -திட்ட மேலாளர்
காலேஜ் -கல்லூரி
பஸ்டு இயர் -முதலாம் ஆண்டு
பை பை-சென்று வருகிறேன்
மார்னிங் எழுந்து பிரஸ் பண்ணி யூனிபார்ம் போட்டு ஸ்கூலுக்கு போனாள்-காலையில் எழுந்து, பல் துலக்கி, சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்றாள்.
இலக்கணக் குறிப்பு தருக
எத்தனை எத்தனை, விட்டு விட்டு-அடுக்குத்தொடர்கள்
ஏந்தி- வினையெச்சம்
காலமும் -முற்றும்மை
முத்துக்கனி-உருவகம்
தெள்ளமுது- பண்புத்தொகை
குற்றமிலா- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நா-ஓரெழுத்து ஒரு மொழி
செவிகள் உணவான- நான்காம் வேற்றுமைத்தொகை
சிந்தாமணி- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வெந்து, வெம்பி, எய்தி- வினையெச்சங்கள்
மூடுபனி- வினைத்தொகை
ஆடுங்கிளை -பெயரெச்சத் தொடர்
கருங்குவளை, செந்நெல்-பண்புத்தொகைகள்
விரிமலர் -வினைத்தொகை
தடவரை- உரிச்சொல் தொடர்
மூதூர், நல்லிசை, புன்புலம் -பண்புத்தொகைகள்
நிறுத்தல் -தொழிற்பெயர்
அமையா -ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நீரும் நிலமும், உடம்பும் உயிரும்- எண்ணும்மைகள்
அடுபோர் -வினைத்தொகை
கொடுத்தோர்- வினையாலணையும் பெயர்
பகுபத உறுப்பிலக்கணம்
வளர்ப்பாய்=வளர்+ப்+ப்+ஆய்
வளர்-பகுதி
ப்-சந்தி
ப்-இறந்த கால இடைநிலை
ஆய் -முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
கொள்வார் =கொள்+வ்+ஆர்
கொள்-பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர்-பலர்பால் வினைமுற்று விகுதி
உணர்ந்த=உணர்+த்(ந்)+தன்+அ
உணர்-பகுதி
த் –சந்தி
ந் – விகாரம்
த் –இறந்த கால இடைநிலை
அ-பெயரெச்ச விகுதி
வந்தனன் =வா(வ)+த் (ந்)+த்+அன்+அன்
வா-பகுதி
வ-விகாரம்
த் -சந்தி
ந்-விகாரம்
த் -இறந்தகால இடைநிலை
அன்-சாரியை
அன்-ஆண்பால் வினைமுற்று விகுதி
செய்யாதே
செய்+ய்+ஆ+த்+ஏ
செய்-பகுதி
ய்-சந்தி
ஆ-எதிர்மறை இடைநிலை
த்-எழுத்துப்பேறு
ஏ-முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி
விரித்த =விரி+த்+த்+அ
விரி-பகுதி
த்-சந்தி
த்-இறந்தகால இடைநிலை
அ-பெயரெச்ச விகுதி
குமைந்தனை=குமை+த் (ந்)+த்+அன்+ஐ
குமை -பகுதி
த் -சந்தி
ந் -விகாரம்
த் -இறந்தகால இடைநிலை
அன்-சாரியை
ஐ-முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
பாய்வன=பாய்+வ்+அன்+அ
பாய்-பகுதி
வ்-எதிர்கால இடைநிலை
அன்-சாரியை
அ-பலவின்பால் வினைமுற்று விகுதி
நிறுத்தல் =நிறு+த்+த்+அல்
நிறு-பகுதி
த் -சந்தி
தல்-தொழிற்பெயர் விகுதி
கொடுத்தோர்=கொடு+த்+த்+ஓர்
கொடு-பகுதி
த் -சந்தி
த் -இறந்தகால இடைநிலை
ஓர்-பலர்பால் வினைமுற்று விகுதி
குறுவினா
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது?
நான் பேசும் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.
தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
“விரலை மடக்கியவன் இசையில்லை எழில் வீணையில் என்று சொல்வது போல்” என்ற கவிதை வரிகள் முயற்சி இல்லாத தமிழரைக் குறிப்பிடுகிறது.
கண்ணி என்பதன் விளக்கம் என்ன?
இரண்டு கண்களைப் போல இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக
சாப்ட்வேர் -மென்பொருள்
ப்ரௌசர் -உலவி
க்ராப் -செதுக்கி
கர்சர் -சுட்டி
சைபர் ஸ்பேஸ்-இணைய வெளி
அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் -அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்- இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?
பாட்டுடைத் தலைவனின் பெயரைக் குறிப்பிடாமல் அக வாழ்க்கையைப் பாடுவது அக இலக்கியம்
பட்டுடைத் தலைவனின் பெயரைக் குறிப்பிட்டு புற வாழ்க்கையைப் பாடுவது புற இலக்கியம்
செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக
படு-முருகன் செய்தான். முருகனால் செய்யப்பட்டது
உண்-அரசன் கோவலனைக் கொன்றான். அரசனால் கோவலன் கொலையுண்டான்
வீணையோடு வந்தாள், கிளியே பேசு- தொடரின் வகைகளைச் சுட்டுக
வீணையோடு வந்தாள்-வேற்றுமைத் தொடர்
கிளியே பேசு-விளித்தொடர்
கூவல் என்று அழைக்கப்படுவது எது?
உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை
உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
ஓடை, குளம், கண்மாய், கிணறு.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- குறிப்புத் தருக.
நீரின்றி அமையாத உடல் உணவால் அமைவது. உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்
நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்கு பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது?
அன்னங்கள் விளையாடும் அகன்ற துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள் விழ்ந்து மூழ்கும். அதனால் அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும். இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்
மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் -இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
நீர், நிலம், மலை, காடு.
சிறு வினா
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
எறிதிரை-எறுதிரான்
கலன்-கலயுகோய்
நீர்-நீரிய, நீரியோஸ்
நாவாய்-நாயு
தொணி -தோணீஸ்
திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழியின் சிறப்பு இயல்புகளை விளக்குக.
திராவிட மொழிக்குடும்பம் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் சிறப்புகள்:
தொன்மையானது
இலக்கண இலக்கிய வளம் நிறைந்தது.
தனித்தியங்கும் மொழி
சொல்வளம் நிறைந்தது.
மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
மூன்று -தமிழ்
மூணு-மலையாளம்
மூடு-தெலுங்கு
மூரு-கன்னடம்
மூஜி-துளு
காலந்தோறும் தமிழ் மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
ஓலைச்சுவடியாய், கல்வெட்டாய், செப்பேடாய், துணியாய், காகிதமாய்த் திகழ்ந்த தமிழ் இன்று கணினித் தமிழாய் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது.
அழியாத இலக்கண இலக்கியங்களைப் பெற்று, தொழில்நுட்பப் புதுமைகளை ஏற்று தமிழ் வளர்ந்து வருகிறது.
வளரும் செல்வம் உரையாடலில் குறிப்பிடப்படும் பிற மொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.
சாப்ட்வேர்-மென்பொருள்
நேவி -நாவாய்
எறுதிரான்-எறிதிரை
பாய்யியோனா- பா
சாப்போ-செப்பல் ஓசை
சேப்பிக் ஸ்டேன்சா- வெண்பா
இளிகியா-இளிவரல்
எறிதிரான் ஆப் த பெரிபுலஸ்-கடலைச் சார்ந்த பெரிய புலம்
தன்வினை, பிறவினை- எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.
தன்வினை
முருகன் பந்தை உருட்டினான்.
எழுவாய் ஒரு வினையை செய்தால் அது தன்வினை எனப்படும்.
பிறவினை
முருகன் பந்தை உருட்ட வைத்தான்
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.
புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
அகம்புறம் என்னும் சங்க இலக்கியங்களைப் படிப்பேன். இலக்கணங்களைக் கற்றுத் தெளிவேன். காப்பியங்களைப் படித்து சுவைப்பேன்.
நீதி நூல்களைக் கற்று நெறிப்பட வாழ்வேன்.
சித்தர் பாடல்களைக் கற்று, சிந்தனையை விரிவாக்குவேன்.
புதிது புதிதாக விளைந்துள்ள யாவற்றையும் எளிய நடையில் படங்களுடன் சுவடி செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வேன்.
அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை. அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பயன்படுத்தி எரிகளைத் தூர்வார வேண்டும்.
நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்
நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டுப் புனரமைக்க வேண்டும்.
நிலைத்த புகழைப் பெறுவதற்கு குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
நிலைத்த புகழைப் பெறுவதற்கான வழிமுறைகள்
நீரால் ஆனது உணவு; உணவால் ஆனது உடல்.
உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தவர் ஆவர்.
நிலத்தில் நீரைத் தேக்கியவர், உடலுடன் உயிரைச் சேர்த்தவராவார்.
மழையை நம்பி இருக்கும் புன்செய் நிலத்தை ஆளும் மன்னின் பிற முயற்சிகளால் பயனில்லை.
பள்ளமான நிலங்கள்தோறும் நீர்நிலைகளை உருவாக்குபவனே மூவகை இன்பத்தையும், நிலைத்த புகழையும் பெறுவான்
சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்குவார். அடியில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும். கீழே உள்ள சேறோடித் துளையில் இருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர்வார வேண்டிய அவசியம் இல்லை.
பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
பறவைகள் பாட, சிறுவர்கள் விளையாட கிளை விரித்திருந்த மரம் இன்று காய்ந்து, பட்டைகள் உரிந்து, கட்டை என்னும் பெயர் பெற்று, வெந்து கருகி, மொட்டைக் கிளையோடு வெட்டப்படும் நாளை எண்ணிக் கவலை அடைந்தது. அது
இறுதிக்காலத்தை எய்திய மனிதனைப் போல் துன்பத்தில் உழன்றது.
நெடுவினா
திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.
ஒப்பியல் ஆய்விற்குப் பெருந்துணை- தமிழே
திராவிட மொழிகளில் தமிழே மிகவும் தொன்மையானது
திராவிட மொழிகளில் தமிழே இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும் வாய்ந்தது
திராவிட மொழிகளில் பிறமொழித் தாக்கம் குறைவாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும்
திராவிட மொழிகளில் சிலவற்றின் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது
திராவிட மொழிகளில் தனித்துவமான இலக்கணச் சிறப்பைப் பெற்றுத் தனித்து இயங்கும் மொழி தமிழே ஆகும்.
திராவிட மொழிகளில் ஒருபொருட் பன்மொழிச் சொற்கள் மிகுதியாகப் பெற்ற மொழி தமிழே ஆகும்.
இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் சான்றுகளில் பெரும்பாலானவை தமிழ்க்கல்வெட்டுகளே ஆகும்.
தமிழ் மொழியில் உள்ள அடிச்சொற்களின் ஒலியன்கள் பிற திராவிட மொழிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெயர்ந்துள்ளன எ.கா.
மூன்று -தமிழ்
மூணு- மலையாளம்
மூடு-தெலுங்கு
மூரு-கன்னடம்
மூஜி-துளு
தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
தமிழ்விடு தூது
தூதிற் சிறந்த தமிழே!
முன்னுரை
தமிழ்விடு தூது, மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, தகுதி ஆகியன ‘தூது அனுப்பத் தமிழே சிறந்தது’ என்பதற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
தமிழின் இனிமை
இனிக்கும் தெளிந்த அமுதமாய், அந்த அமிழ்தினும் மேலான முத்தி ஆகிய விடுதலை தரும் கனியே! இயல், இசை, நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே!
பாச்சிறப்பு
தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர். பிறர் படிக்கும் வகையில் நீ அவற்றைக் கொண்டிருக்கிறாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகை பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?
பாவின் திறம் அனைத்தும் கைவரப் பெற்று என்றுமே ‘சிந்தா மணியாய்’ இருக்கும் உன்னைச் ‘சிந்து’ என்று கூறிய நா இற்று விழும் அன்றோ?
தகுதிகள்
பத்துக்குணங்கள்:
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம், இராசசம் தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய்.
நூறு வண்ணங்கள்
மனிதனால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக 100 வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.
ஒன்பது சுவைகள்
நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் 9 சுவைகளைப் பெற்றுள்ளாய்.
எண்வகை அழகுகள்
தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று. நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய்.
முடிவுரை
குற்றமில்லாத பத்துக் குணங்களையும், ஒன்பது சுவைகளையும், வண்ணங்கள் நூறையும், அழகுகள் எட்டையும் பெற்றுள்ள காரணத்தால், தமிழே ‘தூது’ அனுப்பத் தகுதி வாய்ந்தது என்பது உய்த்துணரத்தக்கது
நீரின்றி அமையாது உலகு- என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
நீரின்றி அமையாது உலகு
முன்னுரை
வான் சிறப்பு என்னும் தலைப்பில் பத்து குறட்பாக்களை பாடிய வள்ளுவரும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இயற்கையை வாழ்த்திப் பாடிய இளங்கோவடிகளும் நீரின் இன்றியமையாமையை நமக்கு உணர்த்துகின்றனர்.
நீரின்றி அமையாது உலகம்
நீரே மனித வாழ்வின் அடிப்படை என்பதால் நம்முடைய முன்னோர்கள் பல்வேறு வகையான நீர்நிலைகளை உருவாக்கி நீரைப் பாதுகாத்தனர். மழையே பயிர்க் கூட்டமும் உயிர்க் கூட்டமும் மகிழ்ச்சியாக வாழப் பெருந்துணை புரிகின்றது.
நீர் உணவாக…
மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என நோக்கில் வளருகின்றன என்று மாங்குடி மருதனார் கூறுகிறார். “உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” என்கிறது புறநானூற்றுப் பாடல்.
நீர் அரணாக…
“மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” என்னும் குறட்பாவில் நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் நீருக்கே முதலிடம் தருகிறார் திருவள்ளுவர்.
தமிழ் மக்களும் தண்ணீரும்
தாயை பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது சொல் வழக்கு. “தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” என்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்கிறார் ஆண்டாள். திருமஞ்சனம் ஆடல், சிற்றிலக்கியமாகிய பிள்ளைத் தமிழின் நீராடல் பருவம், சாமியாடிகளுக்கு மஞ்சள்நீர் கொடுத்தல், கடலாடுதல், தலைக்குத் தண்ணீர் ஊற்றுதல், சனி நீராடுதல், வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நீராகாரம் அளித்து வரவேற்றல் ஆகிய அனைத்திலும் நீரே முதன்மை இடம்பெறுகிறது.
இன்றைய வாழ்வில் தண்ணீர்
உலகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் உருவாகத் தொடங்கிவிட்டது. நிலத்தடி நீர்வளம் குறைந்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என எச்சரிக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டுமாயின் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பயன்படுத்தி எரிகளைத் தூர்வார வேண்டும். நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டுப் புனரமைக்க வேண்டும்.
முடிவுரை
தண்ணீரின் இன்றியமையாமையை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் நாளை உலகச் சுற்றுச்சூழல் நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை” என்று திருவள்ளுவர் கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்; நீர் நெருக்கடியைத் தவிர்ப்போம்.
பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக
திருநாட்டுச் சிறப்பு
முன்னுரை:
நாடெல்லாம் நீர் நாடாகத் திகழும் காவிரியின் பூவிரியும் கோலத்தைப் பெரியபுராணம் விவரிக்கிறது. திருநாட்டின் நீர்வளத்தையும் இயற்கை வளத்தையும் காண்போம், வாரீர்.
காவிரி ஆற்றுச் சிறப்பு:
மலையிலிருந்து காவிரியாறு ஓடிவருகிறது. தேன் ஒழுகும் மலர்கள்நிறைந்த குளத்தில் பாய்ந்து, மலர்களைக் கலைக்கிறது. அதனால், வண்டுகள் எழுந்து ஆரவாரம் செய்கின்றன. வாய்க்கால்கள் வழியாக எல்லா இடங்களிலும் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகிறது.
களையெடுக்கும் உழத்தியர்
நட்டு வைத்த நெல் நாற்றின் முதல் குருத்தின் சுருள் விரியக்கண்ட உழவர்கள், களையெடுக்கும் பருவத்தைச் சுட்டினர். களை எடுக்கும் பெண்களின் கால்களில் சங்குகள் மிதிபடுவதால், தடுமாறி, இடைசாய்ந்து மெல்ல நடக்கும்போது, கூந்தல் சரிய, அவற்றை மொய்த்திருக்கும் வண்டுகள் கலைந்தன.
நாடெல்லாம் நீர்நாடு
காடுகளில் எங்கும் பருத்த கரும்புகள், சோலைகளின் சிறு கிளைகளில் எல்லாம் அரும்புகள், எங்கும் கருங்குவளை மலர்கள், வயல்களில் எல்லாம் சங்குகள் காணப்படுகின்றன. சோழ நாட்டிற்கு ஈடு இல்லாத வகையில், நாடே நீர்நாடாகக் காட்சியளிக்கிறது.
வானவில் காட்சி:
அகன்ற படிக்கட்டுகளை உடைய குளத்தில் அன்னப் பறவைகள் ஆடுகின்றன. எருமைகள் குளத்தில் மூழ்கி விளையாடுகின்றன. இளம் வாளை மீன்கள் பாக்கு மரங்களின் மீது துள்ளிப் பாய்கின்றன. இக்காட்சி வானவில் போல இருக்கிறது.
மலைகளை ஒத்த வளங்கள்
நெற்கதிர்களைக் கட்டுகளாக அடுக்கி அடுக்கி மலையாகச் சேர்த்து வைப்பர். பலவகையான மீன்களைப் பிடித்து நெடுங்குன்றம் செய்வர். முத்துக்களை மலையாகக் குவித்து வைப்பர். தேன் சிந்தும் மலர்க்கட்டுகளை மலையாகக் குவித்து வைப்பர்.
மலைசூழும் மேகக்காட்சி
மலைபோலக் குவித்து வைக்கப்பட்டுள்ள நெற்கதிர்க் கட்டுகளைச் சரியச் செய்வர். கரிய பருத்த எருமைகள் அவற்றை வட்டமாக மிதிக்கும். இக்காட்சி, மலை உச்சியை வலமாகச் சூழும் கருமேகம் போன்று இருக்கும். இதுபோன்ற காட்சிகள் அங்கே அதிகமாகத் தோன்றும்.
பல்வகை மரங்கள்
தென்னை மரம், செருந்தி மரம், நரந்த மரம், அரசமரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குரா மரம், பனைமரம், சந்தன மரம், நாகமரம், வஞ்சிமரம், காஞ்சி மரம், கோங்குமரம் முதலியன எங்கும் செழித்து வளர்ந்திருக்கின்றன.
முடிவுரை
‘நீர் இன்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் வரிகளை மனத்தில் இருத்தி, நீர்நிலைகளை அமைத்து, திருநாடு போல் நம் நாட்டையும் வளம் அடைய செய்ய வேண்டிய பொறுப்புடன் கடமை ஆற்றுவோமாக!
‘தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
தண்ணீர்
உலகம்மாள் கோவில் கிணறு
இந்திராவின் ஐயா காலத்தில் உலகம்மாள் கோவில் கிணறு மட்டுமே தண்ணீர்க் கிணறாக இருந்தது. இப்போது எல்லாமே வறண்டு விட்டது. மழை பெய்வதில்லை. பெய்தாலும் பேய் மழை. கண்மாய்கள் உடைந்து மூன்றே நாளில் பூமி வறண்டு கிடக்கும்.
பிலாப்பட்டி
நல்ல தண்ணீர் வேண்டும் என்றால் மூன்று மைல் தொலைவில் உள்ள பிலாப்பட்டிக்கு நடந்தே செல்ல வேண்டும். திரும்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆகிவிடும்.
ரயில் நிலையம்
நாலு மாசத்துக்கு முன்தான் மூன்று மணிக்கு வரும் ரயிலில் தண்ணீர் பிடிக்க இந்திரா உள்ளிட்ட இளம் பெண்கள் 12 மணிக்கே ரயில் நிலையம் வரத் தொடங்கினார்கள்.
ரயிலோடு இந்திரா
ஒரு நாள் வழக்கம் போல இந்திரா பிற பெண்களை முந்திக்கொண்டு தண்ணீர் பிடிக்கக் குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். ஊதல் ஒலி கேட்டது. ரயில் புறப்படத் தொடங்கியது. இன்னும் கொஞ்சம் பிடித்தாள். ரயிலிலிருந்து குதிக்க முயன்ற இந்திராவை வடக்கத்திப் பெண் ஒருத்தி, “தற்கொலை பண்ணிக்கொள்ளவா பார்த்தாய்?” என்று சொல்வது போல உள்ளே பிடித்து இழுத்தாள்.
ஊரே தேடியது
இந்திரா வீட்டுக்கு வராததை அறிந்து இந்திராவின் உறவினர்கள் இராமநாதபுரத்தையே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்துவிட்டு கவலையும் அசதியுமாக ஊர் திரும்பினார்கள்.
தண்ணீர்க் குடத்தோடு இந்திரா
இந்திராவின் அம்மா தண்டவாளத்தின் பின்னாலேயே ஓட ஆரம்பித்தாள். அவள் பின்னே ஊரே ஓடி வந்தது. தூரத்தில் இந்திரா இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு வருவது தெரிந்தது.
கடிதம் எழுதுக.
உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் “கால் முளைத்த கதைகள்”என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
நண்பனுக்குக் கடிதம்
சங்கரலிங்கபுரம்.
28-07-2024
அன்புள்ள நண்பா/தோழி,
நலம். நலமறிய ஆவல். கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாள் பரிசாக, நீ அனுப்பிய, எஸ்.இராமகிருஷ்ணனின் “கால் முளைத்த கதைகள்” என்னும் நூலைச் சுவைத்து மகிழ்ந்தேன். அந்நூல் குறித்த கருத்துகளை உன்னிடம் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன்.
இயற்கையின் ரகசியங்களைக் கேள்விகள் ஏதுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட ரகசியங்களைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்கிறது, “கால் முளைத்த கதைகள்” என்னும் நூல். இக்கதைகள் கற்பனைத் திறனைக் கூட்டுகின்றன. வானவில்லின் வண்ணங்கள் கொண்டு பூக்கள் நிறம் பெற்ற கதை, காதல் கொண்ட காதலனும் காதலியும், பூவும் வண்டுமாய் மாறிய கதை, கன்னிப்பெண்கள் பனைமரமாய் மாறிய கதை, பாம்புகள் தென்னை மரமாய் மாறிய கதை போன்றவை விரிந்த சிந்தனையைத் தூண்டுகின்றன.
50க்கும் மேற்பட்ட நாடோடிக் கதைகள் கொண்ட இத்தொகுப்பில், உப்பு மற்றும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு உருவானதற்குச் சொல்லப்படும் கதைகளை மிகவும் ரசித்தேன். வியாபாரி ஒருவனின் பேராசையால் உப்பு தருவிக்கும் எந்திரம் கடலில் மூழ்கி, அதை நிறுத்த மந்திரம் தெரியாததால் இன்றும் கடல் உப்பு தன்மை கொண்டுள்ளதாய்ச் சொல்கிறது, குஜராத்திய பழங்குடியினக் கதை. ஒரே பெண்ணின் மீது ஆசை கொண்ட இரட்டையர்கள், அவள் மீதுள்ள காதலின் காரணமாய், எப்போதும் பிரியாதிருக்க வெற்றிலை பாக்கு சுண்ணாம்பாகப் பிறவி எடுத்ததாகச் சொல்கிறது, வியட்நாம் தேசத்துக் கதை. நாள் முழுவதும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வர்ணங்களைத் தீட்டிய கடவுள், இறுதியாய் வந்த குயிலை வர்ணம் ஏதுமின்றி அனுப்பியதால் அது சோகத்தோடு பாடித் திரிவதாய்ச் சொல்கிறது, பீகார் பழங்குடியினக் கதை.
அவை மட்டுமல்ல. சர்ப்பம் நதியாகவும், நதிகள் மரமாகவும், மரங்கள் கடவுளாகவும் மாறியதாய்ச் சொல்லப்படும் நம்பிக்கைகள் ஆச்சரியமூட்டுபவை. எல்லை விரியும் கற்பனைகள் நிறைந்த இந்நூலை நீயும் சுவைத்து மகிழ இத்துடன் அனுப்பி வைக்கிறேன். நீ படித்து விட்டு மறக்காமல் எனக்கு மடல் எழுது. ஆவலுடன் எதிர்நோக்கும்....
அன்பு நண்பன்/தோழி,
கம்பன்
உறைமேல் முகவரி
பெறுநர்
தமிழரசன்
2, கபிலர் தெரு,
விருதுநகர்.
வரவேற்பு மடல் எழுதுக
சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்று எழுதுக.
வரவேற்பு மடல்
இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம்
நாள்:28.07.2024
நேரம்: காலை 11 மணி
வெற்றியின் நாயகரே வருக!
“சுத்தம் சோறு போடும்” என்னும் பழமொழியே எங்கள் பள்ளியின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனிக் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலே சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்த நடுநிலை நாயகரே! இச்சிறப்பினைக் கொண்டாடும் விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்திருக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!
நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை வீரரே! நமது மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட அல்லும் பகலும் உழைத்தவரே! சுற்றுச்சூழல் பேணிக்காக்க பெருமுயற்சி எடுத்தவரே!
ஏழை மாணவர், மெல்லக் கற்போர் என யாவரும் வென்றிட சீரிய வழி காட்டியவரே! எமது மாவட்டக் கல்வி அலுவலரே! உங்களை “வருக வருக” என வரவேற்பதில் எம்பள்ளி பெருமை கொள்கிறது.
நன்றி!
இவண்
அரசு மேல்நிலைப்பள்ளி
சங்கரலிங்கபுரம்
மனப்பாடப் பாடல்
தமிழ்விடு தூது
தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே- புத்திக்குள் உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்- மண்ணில் குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு மூன்று இனத்தும் உண்டோ- திறம் எல்லாம் வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச் சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே
பெரியபுராணம்
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக் கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மட அன்னம் குளமெல்லாம் கடல் அன்ன நாடெல்லாம் நீர் நாடு தன்னை ஒவ்வா நலமெல்லாம்
புறநானூறு
வான் உட்கும்வடி நீண் மதில் மல்லல் மூதூர் வயவேந்தே செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள் வலி முறுக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதி ஆள! நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப்படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க
உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.
உலகத் தாய்மொழி தின விழா
அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம்
இடம்:பள்ளி வளாகம்
நாள்:28.07.2024
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
தலைமை உரை
சிறப்பு விருந்தினர் உரை
வாழ்த்துரை
நன்றியுரை
நாட்டுப்பண்
அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் !!!
இவண்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
சங்கரலிங்கபுரம்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
கவிதை
கண்ணில் தோன்றும் இக்காட்சி-மனக்
கண்ணில் நீளுது அதன்நீட்சி !
என்னைக் கவருது இக்காட்சி -என்னை
என்னவோ செய்யுது ஆட்சி !
உண்மையை உள்ளம் உணருது-உள்ளம்
உரக்கச் சொல்லத் துடிக்குது !!
எண்ணங்கள் பலவாய் விரியுது-என்றன்
எழுத்துகள் கவியாய் மலருது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக