இயல் 2
புறநானூறு
வான் உட்கும் வடி நீண் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று
அதன் தகுதிகேள் இனி மிகுதிஆள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லை
நிலம் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!
-பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.
பொருள்:
வான் உட்கும் வடி நீண் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே! - வானத்தை முட்டும் அளவிற்கு உயர்ந்தும் அழகிய நீண்ட மதில் சுவர்களை உடையதுமான வளம் நிறைந்த பழமையான ஊரின் வெற்றி பொருந்திய அரசனே!
உட்கும்-முட்டும்;
வடி-அழகிய;
நீண்-நீண்ட;
மல்லல்-வளம் நிறைந்த;
மூதூர்-பழமையான ஊர்;
வய வேந்தே-வெற்றி பொருந்திய அரசனே, வலிமைமிக்க அரசனே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று
அதன் தகுதிகேள் இனி மிகுதிஆள- சொர்க்கம் செல்ல விரும்பினாலும், பகைவர்களை வென்று வலிமையால் உலகத்தைக் காத்து மண்ணுலகம் முழுவதும் ஆள விரும்பினாலும், நிலையான புகழைப் பெற விரும்பினாலும் அதனை அடைவதற்கான வழி என்ன என்று நான் சொல்கிறேன், நீ கேட்பாயாக!
செல்லும் உலகம்-சொர்க்கம்;
ஞாலம் -உலகம்;
காவலர் -அரசன்;
தோள் வலி-உடல் வலிமை;
முருக்கி- வெளிப்படுத்தி;
ஒரு நீ ஆகல்- நீ ஒருவனே ஆள வேண்டும்;
நல்லிசை -நிலையான புகழ்;
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!- நீரின்றி உடம்பு அமையாது. ஏனெனில், நீரால் ஆனது உணவு; உணவே உடம்பாகிறது. அதனால், உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவு எனப்படுவது நிலமும் நீரும் சேர்வதால் விளைவதாகும். நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் இணைத்தவர், உடம்பையும் உயிரையும் படைத்தவருக்குச் சமமாவார்.
உணவின் பிண்டம் -உணவே உடம்பாகிறது;
புணரியோர் -அமைத்தவர்
வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால் - விதைக்கப்பட்டு மழையின்றி, வானத்து மழையை எதிர் நோக்கிக் காத்திருக்கும் மிகப்பரந்த புன்செய் நிலமாக இருந்தாலும், அந்நிலத்தை ஆட்சி செய்யும் அரசனின் முயற்சியால் விளைநிலம் விளைந்து விடுவதில்லை.
அடுபோர்ச் செழிய இகழாது வல்லை -வெல்லும் போர்த்திறம் உடைய பாண்டியனே, நான் சொல்வதை இகழாமல் கேட்பாயாக!
நிலம் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! -பள்ளமான நிலங்கள் தோறும் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்.
இவண் தட்டோரே! - அவ்வாறு நீர் நிலைகளை உருவாக்குபவரே மேற்சொன்ன மூவகை இன்பத்தையும் அடைவர்.
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே! - அத்தகைய நீர்நிலைகளை உருவாக்காதவருக்கு மேற்சொன்ன மூவகை இன்பமும் கிட்டுவது இல்லை.
வித்தி- விதை;
வான் நோக்கும்- வானத்து மழையை எதிர்நோக்கி இருக்கும்;
புன்புலம் -புஞ்சை நிலம்;
கண்ணகன்-மிகவும் பரந்த;
வைப்பு-உலகம்;
நண்ணி- அண்டி (உரிச்சொல்)
நண்ணி யாளும்- நிலத்தை சார்ந்து ஆளும்;
இறைவன்- அரசன்;
தாட்கு(தாள்+க) -முயற்சிக்கு;
அடுபோர் -வெல்லும் போர்
நெளி மருங்கு- பள்ளமான நிலங்கள் தோறும்
தட்டோர் அம்ம - செய்து முடிப்பவர்;
தட்டோரே- அடைவர்;
தள்ளாதோர்- செய்து முடிக்காதவர்;
தள்ளாதோர்- அடைய மாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக