ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

திருக்குறள் இயல் 3

 திருக்குறள் இயல் 3





குறுவினா

1) நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

அ) தன்னைத் தோண்டுபவரையும் நிலம் பொறுமையுடன் தாங்கி நிற்கிறது.

ஆ) அதுபோல, ஒருவர் தன்னை இகழ்பவரிடமும் பொறுமை காக்க வேண்டும்.


2) தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

தீயினும் அஞ்சப்படும்:

தீயசெயல்கள் தீயவிளைவுகளையே தரும். அதனால், தீயசெயல்களைத் தீயைவிடக் கொடியதாகக் கருதி, அவற்றைச் செய்வதற்கு அஞ்ச வேண்டும்.


3) ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்

இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

மோனை நயம்:

ற்றொற்றித்

ற்றினால் 

ற்றிக் 

எதுகை நயம்:

ற்றொற்றித்

ற்றுமோர் 

ற்றினால் 

ற்றிக்

அணி நயம்:

சொற்பொருள் பின்வருநிலையணி.


4) கனவிலும் இனிக்காது எவர் நட்பு?

செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.


சனி, 27 பிப்ரவரி, 2021

நெடுவினா- இயல் 3- பண்பாடு

பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

பண்பாட்டுக் கூறுகளைப் பேணுவோம் !

முன்னுரை:

"தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்கிறார் நாமக்கல் கவிஞர்.  அத்தகைய தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.  சீரிய சிந்தனைகளையும் உயர்ந்த எண்ணங்களையும் கொண்ட தமிழர் பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழரின் பண்பாட்டுக் கூறுகள்:

1) விருந்தோம்பல்

2) ஈகைச் சிறப்பு 

3) போர் அறம்

4) புறமுதுகு காண விரும்பாத வீரச் சிறப்பு

5) வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை

6) பண்பாட்டை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கலைகள்

7) பண்பாட்டை உணர்த்தும் நாட்டுப்புறப் பாடல்கள்


பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்கள்:

1) தமிழர்தம் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஓவியம், நாட்டியம், இசை ஆகிய கவின்கலைகளை ஆதரித்துப் போற்ற வேண்டும்.

2) நமது மரபுக் கலைகளைப் பரப்பவும் அழிந்து வரும் கலை வடிவங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்கவும், இக்கலைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

3) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தொல்பொருள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, தொன்மைச் சிறப்பைப் பறைசாற்றும் கலைப்பொருட்களைக் கண்டெடுத்து, தொல்லியல் அருங்காட்சியகங்கள் பேணப்பட வேண்டும்.

4) புதிய கலைஞர்களை ஊக்குவித்தல், இளம் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்தல், கலை விழாக்கள் நடத்துதல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5) நிகழ்த்துக் கலைகளை நடத்துபவர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

6) தமிழர்தம் பண்பாட்டுக்கூறுகள் ஆவணமாக்கப்பட வேண்டும்.

7) சுற்றுலாக்களில் தமிழர்தம் பண்பாட்டை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

8) இளந்தலைமுறையினர் தமிழ்ப்பண்பாட்டுச் சிறப்பினை உணர்ந்து போற்றிப் பின்பற்ற ஏதுவாக, கல்விக்கூடப் பாடத்திட்டத்தில் அவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

9) திருவிழாக்களில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீரவிளையாட்டுகள் நடத்தப்பட வேண்டும்.

முடிவுரை:

யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், செல்வத்துப் பயனே ஈதல், பிச்சை புகினும் கற்கை நன்றே, மானமே பெரிது, ஒழுக்கமே உயர்வு போன்ற உலகில் எங்கும் காண முடியாத உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள் நாம். அத்தகைய பண்பாட்டை நம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

அகழாய்வு (பட்டிமன்றம்)

 அகழாய்வுகள் (பட்டிமன்றம்)



இயல் 3

குறுவினா

தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

அகழாய்வு அவசியமான செயல்பாடு:

அ) அகழாய்வு செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்கள், பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன.

ஆ) தமிழ்ச்சிந்தனையைப் புரிந்துகொள்ளவும், தமிழர்தம் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டவும் அகழாய்வு துணைசெய்கிறது.


சிறு வினா

வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

அகழாய்வின் தேவை குறித்த எனது கருத்துகள்:

அ) அகழாய்வு செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, நம் முன்னோர் வாழ்ந்த காலத்தை அறுதியிட்டு கூற முடியும்.

ஆ) அவர்கள் பயன்படுத்திய பொருள்களைக் கொண்டு, அவர்களின் வாழ்க்கை முறைகளை ஊகித்தறிய முடியும். 

இ) இலக்கியச் சான்றுகளையும் தொல்பொருள் சான்றுகளையும் ஒப்பிட்டு அவர்களின் பண்பாட்டை உய்த்துணர முடியும்.

ஈ) முன்னோர்களின் சிந்தனைகளை உணரவும், அவற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டவும் அகழாய்வு அவசியமான ஒன்றாகும்.

உ) நம் முன்னோர்களின் வரலாறும் வாழ்க்கை முறைகளும் வளரும் தலைமுறைக்கு நல்ல பாடமாக அமையும்.

மணிமேகலை இயல் 3

 மணிமேகலை

இயல் 3

குறுவினா 

1) பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் 

இடம்: மணிமேகலை-விழாவறை காதை

பொருள் விளக்கம்:

மணிமேகலைக் காப்பியத்தில் விழாவறை காதையில் முரசறைவோன், விழா முன்னேற்பாடுகளைப் பற்றி அறிவிக்கிறான். அப்போது, "விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்" என்று அறிவிக்கிறான்.


2) பட்டிமண்டபம், பட்டிமன்றம்- இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.

பட்டிமண்டபம், பட்டிமன்றம்-இரண்டும் ஒன்றல்ல.  ஆனால், தற்காலத்தில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.


சிறு வினா

உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

எங்கள் ஊர் விழாவும் இந்திர விழாவும்



வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஏறு தழுவுதல், இயல் 3

 ஏறு தழுவுதல், இயல் 3



குறுவினா 

1) நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

நான் வாழும் பகுதி, விருதுநகர். இப்பகுதியில் ஏறு தழுவுதல்,

அ) சல்லிக்கட்டு

ஆ) மஞ்சுவிரட்டு

இ) மாடுபிடித்தல் 

ஈ) மாடுவிடுதல் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.


2) ஏறு தழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.

ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்கள்:

அ) ஏறுகோள் (சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை)

ஆ) எருதுகட்டி (கண்ணுடையம்மன் பள்ளு)


3)  ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

தொல்லியல் சான்றுகள்

அ) சேலம் மாவட்டம் - கருவந்துறை நடுகல் 

ஆ) நீலகிரி மாவட்டம் - கரிக்கையூர் பாறை ஓவியம் 

இ) மதுரை மாவட்டம் - கல்லூத்து மேட்டுப்பட்டிக் காளை ஓவியம்

ஈ) தேனி மாவட்டம்-  சித்திரக்கல்புடவு காளை ஓவியம்.


சிறுவினா 

1) வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக. 

பண்பாட்டு அடையாளம்

அ) முல்லை நில மக்கள் கால்நடைகளை வளர்த்தனர்.

ஆ) மருதநில மக்கள் கால்நடைகளை வேளாண் உற்பத்தித் தொழிலில் பயன்படுத்தினர்.

இ) பாலைநில மக்கள் கால்நடைகளைப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தினர்.

ஈ) வேளாண்மைக்குத் துணைநின்ற மாடுகளுக்கு நன்றி கூறவே மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உ) மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து, ஊட்டி விடுவர்.

ஊ) இப்பண்பாட்டின் தொடர்ச்சியாக மாடுகளுடன் விளையாடி மகிழும் மரபு உண்டானது.  இதுவே, பின்னர் ஏறு தழுவுதல் என்னும் பண்பாடாக மலர்ந்தது.

ஊ) சல்லி நாணயங்களை மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கத்தால் சல்லிக்கட்டு என்னும் பெயர் உண்டானது.


2) ஏறு தழுவுதல், திணை நிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருக்கிறது?

திணைநிலை வாழ்வில் ஏறு தழுவுதல்:

அ) முல்லை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் ஆயர்கள், ஆடுமாடுகளுடன் உறவாடி மகிழ்கின்றனர். தம் உறவினர்களை அழைப்பது போலச் செல்லப் பெயர் வைத்து அழைக்கின்றனர். சுவையான உணவுப்பண்டங்களை மாடுகளுக்குப் பகிர்ந்தளித்து மகிழ்கின்றனர். 

ஆ) மருதநில வேளாண் குடிகள், வேளாண்மைக்குத் துணைநின்ற கால்நடைகளுக்குப் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக 'ஏறு தழுவுதல்' என்னும் வீர விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்குபெறும் காளைகளுக்கு உரிய மரியாதைகளுடன் வழிபாடு செய்யப்படும்.  

இ) பாலைநில மக்கள் காளைகளை வண்டியில் பூட்டி போக்குவரத்திற்காகப் பயன்படுத்தினர்.


நெடுவினா

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்

முன்னுரை:

வீரத்திற்கும் விளைச்சலுக்கும் உழைப்பிற்கும் செல்வத்திற்கும் அடையாளப்படுத்தப்படுபவை, மாடுகள். முல்லை, மருத நிலங்களில் கால்கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பண்பாடாகியுள்ளது, ஏறு தழுவுதல்.  ஏறு தழுவுதல் தமிழரின் நாகரித்தை உணர்த்தும் விளையாட்டு; வீரத்தைப் பெருமிதப்படும் பண்பாட்டு நிகழ்வு; தமிழர்தம் அடையாளம்!

தமிழர்தம் வீரத்தின் விளைநிலம்:

ஏறு தழுவுதல், தமிழர்தம் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. காளையை அடக்கும் வீரமகனையே ஆயர்குலப்பெண் மணம் புரிவாள். ஏறு தழுவுதலில் காயம்பட்டு இறந்த வீரனுக்கு நடுகல் எடுக்கும் வழக்கமும் இருந்தது.

பண்பாட்டு அடையாளம்:

முல்லை நில மக்களின் வாழ்வாதாரமாகவும், மருதநில வேளாண் உற்பத்திக்குத் துணையாகவும், பாலைநிலப் போக்குவரத்திற்கு ஆதாரமாகவும் காளைகள் விளங்கின.

ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்:

மேலை நாடுகளில் குறிப்பாக, ஸ்பெயின் நாட்டில் காளைகளைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். ஆட்டத்தின் முடிவில் காளைகள் கொல்லப்படுவதும் உண்டு. அவ்விளையாட்டு மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவது போலிருக்கின்றது.  

ஆனால், தமிழரின் ஏறு தழுவுதல் அறம் சார்ந்தது. ஏறு தழுவுதலுக்கு முன்பும் பின்பும் காளைகளுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தற்காலங்களில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளும், சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதற்கு முன் காளைகளுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. காளைகளைத் துன்புறுத்துவதும் காளைகளுக்கு ஊக்க மருந்து கொடுப்பதும் நீதிமன்ற உத்தரவின்படி, தடை செய்யப்பட்டுள்ளது. காயம்பட்ட வீரர்களுக்கும் காளைகளுக்கும் உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிடிபடும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.  அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

முடிவுரை:

பண்டைய வீரவுணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.  நம் முன்னோரின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.


புதன், 24 பிப்ரவரி, 2021

புறநானூறு, இயல் 2

 புறநானூறு 



குறுவினா

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- குறிப்பு தருக.

அ) புறநானூற்றில் குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது.

ஆ) நீர் இன்றி உணவு அமையாது.

இ) உணவு இன்றி உடல் அமையா

ஈ) அதனால், நீர் இன்றி உடல் அமையாது என்பது புலனாகிறது.


சிறு வினா

நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

நிலைத்த புகழைப் பெறுவதற்கான வழிமுறைகள்

அ) நீரால் ஆனது உணவு; உணவால் ஆனது உடல்.

ஆ) உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தவர் ஆவர்.

இ) நிலத்தில் நீரைத் தேக்கியவர், உடலுடன் உயிரைச் சேர்த்தவராவார்.

ஈ) மழையை நம்பி இருக்கும் புன்செய் நிலத்தை ஆளும் மன்னின் பிற முயற்சிகளால் பயனில்லை.

உ) பள்ளமான நிலங்கள்தோறும் நீர்நிலைகளை உருவாக்குபவனே மூவகை இன்பத்தையும், நிலைத்த புகழையும் பெறுவான்.


செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

பெரிய புராணம்

 பெரியபுராணம்




குறுவினா

நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

வானவில் காட்சி 

அ) அகன்ற படிக்கட்டுகளை உடைய குளத்தில் அன்னப் பறவைகள் ஆடுகின்றன.

ஆ) எருமைகள் விழுந்து மூழ்கிக் குளத்து நீரைக் கலங்கச் செய்கின்றன.

இ) கலங்கிய நீரில், இளம் வாளை மீன்கள் பாக்கு மரங்களின் மீது துள்ளிப் பாய்கின்றன.

ஈ) இக்காட்சி, நிலையான வானத்தில் தோன்றும் வானவில் போல இருக்கிறது.


நெடுவினா

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

திருநாட்டுச் சிறப்பு

முன்னுரை:

நாடெல்லாம் நீர் நாடாகத் திகழும் காவிரியின் பூவிரியும் கோலத்தைப் பெரியபுராணம் விவரிக்கிறது. திருநாட்டின் நீர்வளத்தையும் இயற்கை வளத்தையும் காண்போம், வாரீர்.

காவிரி ஆற்றுச் சிறப்பு:

மலையிலிருந்து காவிரியாறு ஓடிவருகிறது. தேன் ஒழுகும் மலர்கள்நிறைந்த குளத்தில் பாய்ந்து, மலர்களைக் கலைக்கிறது. அதனால், வண்டுகள் எழுந்து ஆரவாரம் செய்கின்றன.  வாய்க்கால்கள் வழியாக எல்லா இடங்களிலும் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகிறது.

களையெடுக்கும் உழத்தியர் 

நட்டு வைத்த நெல் நாற்றின் முதல் குருத்தின் சுருள் விரியக்கண்ட உழவர்கள், களையெடுக்கும் பருவத்தைச் சுட்டினர். களை எடுக்கும் பெண்களின் கால்களில் சங்குகள் மிதிபடுவதால், தடுமாறி, இடைசாய்ந்து மெல்ல நடக்கும்போது, கூந்தல் சரிய, அவற்றை மொய்த்திருக்கும் வண்டுகள் கலைந்தன.

நாடெல்லாம் நீர்நாடு 

காடுகளில் எங்கும் பருத்த கரும்புகள், சோலைகளின் சிறு கிளைகளில் எல்லாம் அரும்புகள், எங்கும் கருங்குவளை மலர்கள், வயல்களில் எல்லாம் சங்குகள் காணப்படுகின்றன. சோழ நாட்டிற்கு ஈடு இல்லாத வகையில், நாடே நீர்நாடாகக் காட்சியளிக்கிறது.


வானவில் காட்சி:

அகன்ற படிக்கட்டுகளை உடைய குளத்தில் அன்னப் பறவைகள் ஆடுகின்றன. எருமைகள் குளத்தில் மூழ்கி விளையாடுகின்றன. இளம் வாளை மீன்கள் பாக்கு மரங்களின் மீது துள்ளிப் பாய்கின்றன. இக்காட்சியை வானவில் போல இருக்கிறது.

மலைகளை ஒத்த வளங்கள்

நெற்கதிர்களைக் கட்டுகளாக அடுக்கி அடுக்கி மலையாகச் சேர்த்து வைப்பர். பலவகையான மீன்களைப் பிடித்து நெடுங்குன்றம் செய்வர். முத்துக்களை மலையாகக் குவித்து வைப்பர். தேன் சிந்தும் மலர்க்கட்டுகளை மலையாகக் குவித்து வைப்பர்.

மலைசூழும் மேகக்காட்சி 

மலைபோலக் குவித்து வைக்கப்பட்டுள்ள நெற்கதிர்க் கட்டுகளைச் சரியச் செய்வர். கரிய பருத்த எருமைகள் அவற்றை வட்டமாக மிதிக்கும். இக்காட்சி, மலை உச்சியை வலமாகச் சூழும் கருமேகம் போன்று இருக்கும். இதுபோன்ற காட்சிகள் அங்கே அதிகமாகத் தோன்றும்.

பல்வகை மரங்கள் 

தென்னை மரம், செருந்தி மரம், நரந்த மரம், அரசமரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குரா மரம், பனைமரம், சந்தன மரம், நாகமரம், வஞ்சிமரம், காஞ்சி மரம், கோங்குமரம் முதலியன எங்கும் செழித்து வளர்ந்திருக்கின்றன.

முடிவுரை

'நீர் இன்றி அமையாது உலகு' என்ற வள்ளுவரின் வரிகளை மனத்தில் இருத்தி, நீர்நிலைகளை அமைத்து, திருநாடு போல் நம் நாட்டையும் வளம் அடைய செய்ய வேண்டிய பொறுப்புடன் கடமை ஆற்றுவோமாக!








சனி, 20 பிப்ரவரி, 2021

பத்தியை அறிவிப்பாக மாற்றுக. பக்-27

 வடிவம் மாற்றுக.

பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி 25 ஆண்டுகளாகச் சிறந்த கல்விப் பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முக படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப்பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த "உள்ளங்கையில் உலகம்"என்ற நூலின் வெளியீட்டு விழா ஜூன் 21, பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் (கின்னஸ் சாதனை படைத்த) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.


அறிவிப்பு



வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

கடிதம்- கால் முளைத்த கதைகள்

 கடிதம் எழுதுக.

இயல் 1


உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்"என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.



நண்பனுக்குக் கடிதம் 


1, வள்ளுவர் தெரு,

சங்கரலிங்கபுரம்.

20-02-2021.


அன்புள்ள நண்பா/தோழி,


     நலம். நலமறிய ஆவல். கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாள் பரிசாக, நீ அனுப்பிய, எஸ்.இராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்" என்னும் நூலைச் சுவைத்து மகிழ்ந்தேன். அந்நூல் குறித்த கருத்துகளைஉன்னிடம் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன்.

     இயற்கையின் ரகசியங்களைக் கேள்விகள் ஏதுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.  அப்படிப்பட்ட ரகசியங்களைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்கிறது, "கால் முளைத்த கதைகள்" என்னும் நூல்.  இக்கதைகள் கற்பனைத் திறனைக் கூட்டுகின்றன. வானவில்லின் வண்ணங்கள் கொண்டு பூக்கள் நிறம் பெற்ற கதை, காதல் கொண்ட காதலனும் காதலியும், பூவும் வண்டுமாய் மாறிய கதை, கன்னிப்பெண்கள் பனைமரமாய் மாறிய கதை, பாம்புகள் தென்னை மரமாய் மாறிய கதை போன்றவை விரிந்த சிந்தனையைத் தூண்டுகின்றன.

     50க்கும் மேற்பட்ட நாடோடிக் கதைகள் கொண்ட இத்தொகுப்பில், உப்பு மற்றும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு உருவானதற்குச் சொல்லப்படும் கதைகளை மிகவும் ரசித்தேன்.  வியாபாரி ஒருவனின் பேராசையால் உப்பு தருவிக்கும் எந்திரம் கடலில் மூழ்கி, அதை நிறுத்த மந்திரம் தெரியாததால் இன்றும் கடல் உப்பு தன்மை கொண்டுள்ளதாய்ச் சொல்கிறது, குஜராத்திய பழங்குடியினக் கதை. ஒரே பெண்ணின் மீது ஆசை கொண்ட இரட்டையர்கள், அவள் மீதுள்ள காதலின் காரணமாய், எப்போதும் பிரியாதிருக்க வெற்றிலை பாக்கு சுண்ணாம்பாகப் பிறவி எடுத்ததாகச் சொல்கிறது, வியட்நாம் தேசத்துக் கதை.  நாள் முழுவதும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வர்ணங்களைத் தீட்டிய கடவுள், இறுதியாய் வந்த குயிலை வர்ணம் ஏதுமின்றி அனுப்பியதால் அது சோகத்தோடு பாடித் திரிவதாய்ச் சொல்கிறது, பீகார் பழங்குடியினக் கதை.

     அவை மட்டுமல்ல. சர்ப்பம் நதியாகவும், நதிகள் மரமாகவும், மரங்கள் கடவுளாகவும் மாறியதாய்ச் சொல்லப்படும் நம்பிக்கைகள் ஆச்சரியமூட்டுபவை.  எல்லை விரியும் கற்பனைகள் நிறைந்த இந்நூலை நீயும் சுவைத்து மகிழ இத்துடன் அனுப்பி வைக்கிறேன்.  நீ படித்து விட்டு மறக்காமல் எனக்கு மடல் எழுது. ஆவலுடன் எதிர்நோக்கும்....


அன்பு நண்பன்/தோழி,

கம்பன்


உறைமேல் முகவரி 

பெறுநர்

     தமிழரசன்

     2, கபிலர் தெரு,

     விருதுநகர்.



- மலர் மகேந்திரன்.



வியாழன், 18 பிப்ரவரி, 2021

தொடர் இலக்கணம் இயல் 1

இயல் 1

கற்கண்டு

தொடர் இலக்கணம்


குறுவினா

1) செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக

செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள்:
அ) உண்- கோவலன் கொலையுண்டான்.
ஆ) ஆயிற்று- வீடு கட்டியாயிற்று
இ) போயிற்று- சட்டி உடைந்து போயிற்று
ஈ) போனது- பணம் காணாமல் போனது
உ) பெறு - குமரன் வாழ்த்துப் பெற்றான்
(ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் எழுதினால் போதுமானது)

2) வீணையோடு வந்தாள், கிளியே பேசு- தொடரின் வகைகளைச் சுட்டுக.
அ) வீணையோடு வந்தாள்- (ஓடு) மூன்றாம் வேற்றுமைத் தொடர்.
ஆ) கிளியே பேசு- (கிளியே) விளித்தொடர்


சிறு வினா

தன்வினை, பிறவினை- எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

தன்வினை

அ) எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை.
ஆ) (எ.கா.) அவன் திருந்தினான்.

பிறவினை

அ) எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை
ஆ) வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.
இ) (எ.கா.) அவன் திருந்தச் செய்தான்.





கற்பவை கற்றபின்....

1) தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான்- இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.
தன்வினைத் தொடர்- பதவியை விட்டு நீங்கினான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்- இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.
பிறவினைத் தொடர்- மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே- இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக.
செய்வினைத் தொடர்- தமிழ்த்தேனை உண்ணுவர்.

விளக்கம்:

உண்ணப்படும் தமிழ்த்தேனே.
இதில், எழுவாய்- புலவர்கள் (தோன்றா எழுவாய்),
செயப்படுபொருள்- தமிழ்த்தேனை; ('தமிழ்த்தேனே'-இதில் விளி உருபு 'ஏகாரம்' நீக்கப்பட வேண்டும். 'தமிழ்த்தேன்' - செயப்படுபொருள் ஆதலால் இரண்டாம் வேற்றுமை உருபு'ஐ' சேர்க்கப்பட வேண்டும். தமிழ்த்தேன்+ஐ=தமிழ்த்தேனை)
பயனிலை- உண்ணுவர் (எழுவாயின் பயன் நிலைபெற்று நிற்கும் இடம் - வினைச்சொல்- ' உண்'. ' உண்' உடன் எதிர்கால இடைநிலையும் பலர்பால் விகுதியும் சேர்க்கப்பட வேண்டும்--> உண்+வ்+அர்--->உண்ணுவர்)

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர்- இத்தொடரைச் செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
செயப்பாட்டு வினைத் தொடர்- திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார்- இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக
பிறவினைத் தொடர்-  நிலவன் சிறந்த பள்ளியில் படிக்க வைத்தார்.


2) சொற்களைத் தொடர்களாக மாற்றுக.

அ) மொழிபெயர்- தன்வினை, பிறவினைத் தொடர்களாக.
தன்வினை- மொழிபெயர்த்தார்
பிறவினை- மொழிபெயர்க்கச் செய்தார்.

ஆ) பதிவு செய்- செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
செய்வினை- பதிவு செய்தான்.
செயப்பாட்டுவினை- பதிவு செய்யப்பட்டது.

இ) பயன்படுத்து- தன்வினை, பிறவினைத் தொடர்களாக.
தன்வினை- பயன்படுத்தினான்.
பிறவினை- பயன்படுத்தச் செய்தான்.

ஈ) இயங்கு- செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
செய்வினை- இயங்கியது
பிறவினை- இயக்கப்பட்டது.


3) பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.

(தமிழ் இலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களை, நம்மை, வாழ்வியல் அறிவைக்)

அ) தமிழ் ________ கொண்டுள்ளது.
ஆ) நாம் ________வாங்க வேண்டும்.
இ) புத்தகங்கள்________கொடுக்கின்றன.
ஈ) நல்ல நூல்கள்_______நல்வழிப் படுத்துகின்றன


விடை:
அ) தமிழ் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது.
ஆ) நாம் தமிழ் இலக்கிய நூல்களை வாங்க வேண்டும்
இ) புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன.
ஈ) நல்ல புத்தகங்கள் நம்மை நல்வழிப் படுத்துகின்றன.


4) பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)
அ) எல்லோருக்கும்________வணக்கம்.
ஆ) அவன்________நண்பனாக இருக்கிறான்.
இ) ________ஓவியமாக வரைந்து வா.
ஈ) __________விலங்கிடம் பழகாதே.

விடை:
அ) எல்லோருக்கும் இனிய வணக்கம்.
ஆ) அவன் நல்ல நண்பனாக இருக்கிறான்.
இ) பெரிய ஓவியமாக வரைந்து வா.
ஈ) கொடிய விலங்கிடம் பழகாதே.


5) பொருத்தமான வினையடைகளைத் தேர்வு செய்க.

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)
அ) ஊர்தி________சென்றது.
ஆ) காலம்_______ஓடுகிறது.
இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை________காட்டுகிறது.
ஈ) இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும்________காட்டு.

விடை:
அ) ஊர்தி வேகமாகச் சென்றது.
ஆ) காலம் மெதுவாக ஓடுகிறது.
இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை அழகாக காட்டுகிறது.
ஈ) இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் பொதுவாகக் காட்டு.

6. அடைப்புக்குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.

அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத் தொடராக)
நம் முன்னோர் எத்தகைய வாழ்வு நடத்தினர்?
நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினாரா?

ஆ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக)
இசையோடு அமைவது பாடல்.

இ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக)
நீ இதைச் செய்.


7) வேர்ச் சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

அ) தா (உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத் தொடர்)


தந்தேன், தருவித்தேன்

ஆ) கேள் (வினாத்தொடர்)
கேட்பாயா?

இ) கொடு ( செய்தித்தொடர், கட்டளைத் தொடர்)
பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான்.
பசித்தோர்க்கு உணவுகொடு.

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டு வினைத்தொடர், பிறவினைத் தொடர்)
பார்த்தான், பார்க்கப்பட்டது, பார்க்கச் செய்தான்


8) சிந்தனை வினா

அ) அவை யாவும் இருக்கின்றன
ஆ) அவை யாவையும் இருக்கின்றன.
இ) அவை யாவும் எடுங்கள்
ஈ) அவை யாவையும் எடுங்கள்
உ) அவை யாவற்றையும் எடுங்கள்.
மேற்கண்ட சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.

அ) அவை யாவும் இருக்கின்றன.

அவை- பன்மை; யாவும்- ஒருமை; இருக்கின்றன- பன்மை

அவை இருக்கின்றன- என்பதுதான் சரியான தொடர்.(யாவும்- என்பது ஒருமையாதலால் பிழையான தொடராயிற்று)

அவை யாவையும் இருக்கின்றன.

அவை- பன்மை; யாவையும்- பன்மை; இருக்கின்றன- பன்மை= இது சரியான தொடர்.

அவை யாவும் எடுங்கள்- 

அவை- பன்மை; யாவும்- ஒருமை; எடுங்கள்- பன்மை( உயர்வு கருதி பெரியோரை ஒருமையாக இருந்தபோதிலும் பன்மைக்குரிய ' கள்' விகுதி சேர்த்துக் கூறுவதுமுண்டு)- அவை யாவையும் 

ஆ) நீங்கள் ஒரு நாளிதழில் பணிபுரிகிறார்கள். அங்குப் புதிய வார இதழ் ஒன்று தொடங்க விருக்கிறார்கள். அதற்காக அந்நாளிதழில் விளம்பரம் தருவதற்குப் பொருத்தமான சொற்றொடர்களை வடிவமைத்து எழுதுக.




புதன், 17 பிப்ரவரி, 2021

இயல் 3, ஒன்பதாம் வகுப்பு , காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 3

ஒன்பதாம் வகுப்பு

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

தலைப்பு: கவின்கலைகள் 


யக் கலைகள் றுபத்து நான்கு

ய்ந்தெ டுத்து நீயும் பழகு

னத்தை யக்கும் மேடைக் கலைகள்…

மனக்கவலை நீக்கி கிழ்ச்சி தருமே..!

குலும் யாழும் குயிலிசை வெல்லும்

கதகளி ரதம் க்தியில் செல்லும்

மேமும் பறையும் இடியென முழங்கும்

தொடையும் பாட்டும் துணையென விளங்கும்

சியும் கையும் மறந்தே போகும்

இயலிசை நாடகம் மருந்தென ஆகும்..!

– மலர் மகேந்திரன்.


திங்கள், 15 பிப்ரவரி, 2021

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. இயல் 2 ஒன்பதாம் வகுப்பு

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

ஒன்பதாம் வகுப்பு

இயல் 2

எறும்பு



த்துகோடி ஆண்டுகளாய்ப் 

பாரினில் இராஜ்ஜியம்..!

வேதிக்கலவை தன்னில் 

விந்தையான உரையாடல்..!

ட்டத்தின் வழியில்

மூக வாழ்க்கை..!

ய்வறியா உழைப்பு தன்னில் 

ப்புமையில்லாச் சுறுசுறுப்பு..!

கால்முடிகளில் உன் காதுகள்..!

டல்துளைகளில் உன் சுவாசம்..!

ணர்கொம்புகளில் உன் வாசம்..!

கைட்டின்ஓடே உன் கவசம்..!

ந்தைபுத்தியே உன் கிமை..!

தனக்கொன்றும் ஊருக்கொன்றுமாய் ருவயிறுகள்..!

றாறு வாரங்களே உன் வாழ்காலம்..!

டையறா உழைப்பிலே உன் எதிர்காலம்..!

உன்னுடைய மரபணுவின் நீட்சியே நாங்கள்..!

உன் வழியே உத்தமம்..!

பின்பற்றுவோம் நித்தமும்..!!


- மலர் மகேந்திரன்.



பாடல் விளக்கம்:


எறும்புகள் 110-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், டைனோசர் காலத்திலிருந்தே தோன்றி, இன்றுவரை 22000 சிற்றினங்களாகப் பனிபடர் கண்டங்கள் தவிர்த்து உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தியுள்ளனர்.

தகவல் தொடர்பிற்காக, ஒரு வகையான, சிக்கலான வேதிப்பொருட்களை அவை பயன்படுத்துகின்றன.

எறும்புகளின் சமூகத்தில் ஒவ்வொரு எறும்புக்கும் தனித்தனியே வேலைகள் பகிர்ந்து அளிக்கப் படுகின்றன.

கடினமான வேலைகளை வாலிப எறும்புகளும் இலகுவான வேலைகளை வயதான எறும்புகளும் பகிர்ந்து கொள்கின்றன.

எறும்புகள் தங்களுடைய சட்டங்களை மதித்துக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்றன.

தேனீக்கள் போன்று சுறுசுறுப்பாக ஓய்வின்றிப் பணியாற்றுகின்றன.

எறும்புகள் தம் கால்களில் உள்ள முடி போன்ற தூவிகள் மூலம் நில அதிர்வுகளை ஒலி அதிர்வுகளாக மாற்றி ஓசையை உணர்ந்து கொள்கின்றன. காதுகள் இல்லை.

வெளிப்புற உடலில் உள்ள துளைகள் மூலம் ஆக்சிஜனை கிரகித்துக் கொள்கின்றன.

முன்பகுதியில் உள்ள உணர்கொம்புகளின் மூலம் மணத்தை அறிந்து கொள்கின்றன.  அதன் மூலம் உணவுப்பொருள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கின்றன.

எறும்புகளின் வெளிப்புற உடலமைப்பு கைட்டின் என்ற கடினமான புரதத்தால் ஆனது. இது எறும்புகளுக்கு கவசமாகத் திகழ்கிறது.

சமூகத்தோடு ஒருங்கிணைந்து சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து செல்லும் சமூக ஒழுக்கமே எறும்புகளின் தனிச்சிறப்பு. அதனால் இது மந்தை புத்தி எனப்படுகிறது. மந்த புத்தி என்பது வேறு.

எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒன்று தனக்கான உணவைச் செரிப்பதற்கு.  இன்னொன்று மற்ற எறும்புகளுக்கு உணவை சேகரித்து எடுத்துச் செல்வதற்கு.  மனிதர்கள் யாராவது இப்படி இருப்பார்களா என்பது சந்தேகமே!  

எறும்புகள் பொதுவாக 90 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை.  சிலவகைக் கருப்பு எறும்புகள் 15 ஆண்டுகள் வரை வாழும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எறும்புகளில் இருந்து பல பரிமாணங்களை அடைந்து மனிதர்கள் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எறும்புகளின் சமூக ஒழுங்கு, ஒற்றுமை, உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை சிறந்த வழிகளாக இருக்கின்றன.  அவை மனிதர்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவை.

இத்தகைய உயர்ந்த நெறிகளை மனிதர்களான நாங்களும் பின்பற்றுவோம்.


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. இயல் 1


காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!




கூண்டுக் கிளியாய்க் கூட்டினை விரும்பாத மீனே!

விடுதலையெண்ணி சிறகெனுந் துடுப்பைச் சீட்டியடித்த கண்ணே!

இலக்குத்தவறித் தனிச்சிறைக்குள் விழுந்திடாதே..! கடுந்துன்பத்தில் உன்றிடாதே..!

னக்கு நீலக்கடலே எல்லை- என்ற

ண்மையை மனிதர் ணரவில்லை..!

ணர்வும் ரிமையும் யிர்களுக்கும் பொதுவே..!

பிறர் துன்பத்தில் இன்பம் காண்பது எப்படித் தமிழர் அறமாய் ஆகும்..?

மீனுக்கும் மனத்திற்கும் விடுதலையை அளிப்போம்..!

டற்கரை சென்று உவப்போம்..! வின்காட்சிகளில் லைகளை மறப்போம்..!

புத்துணர்ச்சி பெறுவோம்..! புதுஉலகம் படைப்போம்…!

– மலர் மகேந்திரன்

புதன், 10 பிப்ரவரி, 2021

தமிழ்விடு தூது - கவிதைப்பேழை

 இயல் 1 கவிதைப்பேழை

தமிழ்விடு தூது


குறுவினா

1) கண்ணி என்பதன் விளக்கம் யாது?

கண்ணி:

1) இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.

2) அதேபோல், தமிழில் இரண்டிரண்டு அடிகளுடன் எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.


நெடுவினா

தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

தமிழ்விடு தூது

தூதிற் சிறந்த தமிழே!

முன்னுரை  

தமிழ்விடு தூது, மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, தகுதி ஆகியன 'தூது அனுப்பத் தமிழே சிறந்தது' என்பதற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

தமிழின் இனிமை

இனிக்கும் தெளிந்த அமுதமாய், அந்த அமிழ்தினும் மேலான முத்தி ஆகிய விடுதலை தரும் கனியே!  இயல், இசை, நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே!

பாச்சிறப்பு 

தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர்.  பிறர் படிக்கும் வகையில் நீ அவற்றைக் கொண்டிருக்கிறாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகை பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?

பாவின் திறம் அனைத்தும் கைவரப் பெற்று என்றுமே 'சிந்தா மணியாய்' இருக்கும் உன்னைச் 'சிந்து' என்று கூறிய நா இற்று விழும் அன்றோ?

தகுதிகள்

பத்துக்குணங்கள்:

வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம், ராசசம் தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள்.  ஆனால் நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய்.

நூறு வண்ணங்கள்

மனிதனால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல் இல்லை.  நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக 100 வண்ணங்களைக் கொண்டுள்ளாய். 

ஒன்பது சுவைகள்

நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை.  நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் 9 சுவைகளைப் பெற்றுள்ளாய்.  

எண்வகை அழகுகள்

தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று.  நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய்.

முடிவுரை

குற்றமில்லாத பத்துக் குணங்களையும், ஒன்பது சுவைகளையும், வண்ணங்கள் நூறையும், அழகுகள் எட்டையும் பெற்றுள்ள காரணத்தால், தமிழே 'தூது' அனுப்பத் தகுதி வாய்ந்தது என்பது உய்த்துணரத்தக்கது.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

தமிழோவியம் இயல் 1

 கவிதைப்பேழை

தமிழோவியம் இயல் 1



குறுவினா

1) தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

தமிழோவியம் கவிதையில் என்னை மிகவும் ஈர்த்த அடிகள்:

"மானிட மேன்மையைச் சாதித்திட குறள் மட்டுமே போதுமே ஓதி நட..."- என்ற கவிதை வரிகள், 'மனிதன்' மேன்மையான நிலையை அடையத் 'திருக்குறள்' என்ற 'உலகப்பொதுமறைநூல்' ஒன்றே போதுமானது என்பதை வலியுறுத்துகின்றன.  இது ஒரு தெளிவான சிந்தனை.  இத்தகைய, அழகிய உயர்ந்த சிந்தனையை வலியுறுத்தும் இக்கவிதை வரிகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.


2) "அகமாய் புறமாய் இலக்கியங்கள் - அவை 

 அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் " - இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

"அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்- அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்"- என்ற பாடல் அடிகளில் சொல்லப்பட்டுள்ள இலக்கியங்களின் பாடுபொருள்களாவன:

அ) அகம் 

ஆ) புறம் 


சிறுவினா

1) காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தமிழ்!

என்றென்றும் நிலைபெற்ற தமிழ் மொழியின் தோற்றம், மிகவும் தொன்மை வாய்ந்தது.

அ) உயர்குடி மக்களுக்கே கல்வி கற்கும் உரிமை இருந்த ஓலைச்சுவடிக்காலத்தில், 'அகவற்பா' யாப்பமைப்பில் தோற்றம் கொண்டிருந்து.  ஓதுவதற்கேற்ற எளிய நூற்பா வடிவில் 'சூத்திரங்கள்' சூல் கொண்டிருந்தன.

ஆ) புத்தமும் சமணமும் புகழ் பெறுங்காலத்தே புதுவகைக் 'காப்பியம்' என்றொரு 'தொடர்நிலைச் செய்யுள்' வடிவம் பூண்டது.

இ) அறம் பிறழ்ந்த இருண்ட காலத்தில் அறிவுரை வழங்க, 'வெண்பா' என்றோர் வடிவில் புத்துயிர் பெற்றது.

ஈ) பக்திமணம் பரப்பிய ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் அளவிறந்த 'இசைத்தமிழாய்' ஆட்சி கொண்டிருந்தது.

உ) மூடப் பழக்கங்களை முட்டறுக்கும் சித்தர்களின் சிந்தனை வீச்சுகளால் எளியோர் உள்ளங்களிலும் குடிகொண்டது.

ஊ) வடமொழித் தாக்கத்தின் விளைவாகத் தமிழ் 96 வகைச் சிற்றிலக்கிய வடிவங்களை ஏற்றது.

எ) அச்சகங்களின் வரவாலும் மேலைநாட்டு இலக்கியங்களின் தாக்கத்தாலும் "உரைநடை, சிறுகதை, புதினம், புதுக்கவிதை,  ஹைக்கூ" என்ற வடிவங்களை ஏற்று, உச்சநிலை பெற்றது.

ஏ) கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினித்தமிழாய், கன்னித்தமிழாய் வளர்ந்துவருகிறது.

ஐ) துறைதோறும் புதுவகைக் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற சொல்லாக்கக் கூறுகளைக் கொண்டு, பிறமொழித் துணையின்றித் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது, தமிழ்!


2) "புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்"- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பேன் !

அ) உணர்ச்சிப் பெருக்கோடும் கருத்துச் செறிவோடும் இக்காலத் தமிழ்ச்சமூகத்தைச் சீர்படுத்தும் ஹைக்கூ கவிதைகளை எழுதிக் குவிப்பேன்.

ஆ) தமிழ், தமிழர் நலத்தையே முழுமூச்சாய்க் கொண்டு புதினம் படைப்பேன்.

இ) ஆகச்சிறந்த எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் படித்துப் புகழ் பரப்புவேன்.

ஈ) தமிழர்தம் பண்பாட்டையும் வாழ்வியல் நெறிகளையும் செவ்வியல் மொழிகளில் மொழியாக்கம் செய்வேன்.

உ) துறைதோறும் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து தமிழை வளப்படுத்துவேன்.

ஊ) சங்க இலக்கியச்செங்கருத்துக்களைப் புதுக்கவிதைகளில் வடிப்பேன்.

எ) நீதிக் கருத்துக்களைக் குழந்தை இலக்கியங்களில் நிலைநாட்டுவேன்.

ஏ) ஐன்ஸ்டின் முதலானோரின் அறிவியல் கருத்துகளை அழகு தமிழில் படங்களுடன் நூல் செய்வேன்.





திங்கள், 8 பிப்ரவரி, 2021

திராவிட மொழிக்குடும்பம் உரைநடை உலகம்

 திராவிட மொழிக் குடும்பம்


குறுவினா

1) நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது?

அ) நான் பேசும் மொழி, தமிழ்.

ஆ) தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.


சிறு வினா

1) திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்புயல்புகளை விளக்குக.

திராவிட மொழிக் குடும்பம், நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அவை,

1) தென்திராவிட மொழிகள்

2) நடுத்திராவிட மொழிகள்

3) வடதிராவிட மொழிகள்.

திராவிட மொழிகளுள் எனக்குத் தெரிந்த மொழி, தமிழ்.

தமிழ்மொழியின் சிறப்பு இயல்புகள்:

1) உயிர் எழுத்துக்களில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.

2) உயிருள்ளவைகளுக்கு மட்டுமே பால் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. 

3) வினைச்சொற்கள் திணை, பால், எண், இடம் ஆகியவற்றையும் காட்டும்.

4) மிகுதியான இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும் சொல்வளமும் சொல்லாட்சியும் பெற்றள்ளது.

5) திராவிட மொழிகளுக்குத் தாய் மொழியாகத் திகழ்கிறது.


2) மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.

1) தமிழ்- மூன்று

2) மலையாளம்- மூணு 

3) தெலுங்கு- மூடு 

4) கன்னடம்- மூரு 

5) துளு - மூஜி 


நெடுவினா

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந் துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

ஒப்பியல் ஆய்விற்குத் பெருந்துணையாகும் தமிழே!


முன்னுரை

"உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு" என்ற வள்ளுவரின் வரிகள் மனிதர்களை, அவர்களின் பண்புகளைக் கொண்டே ஒப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  அதுபோலவே, மொழிகளையும் அவைகளின் தனித்தன்மைகளைப் பொறுத்தே ஒப்பிடுகிறார்கள்.  உவமைப் பொருள், எப்போதும் ஒப்புமைப் படுத்தப்படும் பொருளைவிட உயர்ந்ததாக இருக்கும். அத்தகைய, உவமைப் பொருளாக, ஒப்பியல் ஆய்வுக்குரிய கூறுகளைக் கொண்டதாக, தமிழ்மொழி இலங்குகிறது.  சிறப்புவாய்ந்த ஒப்பியல் ஆய்வுக்கூறுகளைக் காண்போம், வாரீர்! 


தமிழ்மொழியின் ஒப்பியல் ஆய்வுக்கூறுகள்:

பொதுவான அடிச்சொற்கள்

திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதை காண முடிகிறது.  திராவிட மொழிகளுள் தமிழ்மொழியில்தான் மிகுதியான வேர்ச்சொற்கள் காணப்படுகின்றன.  இவை பிற திராவிட மொழிகளில் உள்ள வேர்ச்சொற்களை ஒப்பிடத் துணைநிற்கின்றன.

தமிழில் உள்ள பல அடிச்சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன.  சுட்டுப் பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

சான்றுகள்


பொதுவான அடிச்சொற்கள்:

கண்- தமிழ்

கண்ணு- மலையாளம், கன்னடம் 

கன்னு-தெலுங்கு


பொதுவான எண்ணுப் பெயர்கள்:

1) தமிழ்- மூன்று

2) மலையாளம்- மூணு 

3) தெலுங்கு- மூடு 

4) கன்னடம்- மூரு 

5) துளு - மூஜி 

திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை:

மரம் - தமிழ், மலையாளம், கன்னடம் 

மானு- தெலுங்கு


பழமையான இலக்கிய இலக்கணங்கள்

திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகவும் தொன்மை வாய்ந்தது.  தமிழ்மொழியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே உயர்தரச் செவ்வியல் இலக்கியங்களாகச் சங்க இலக்கியமும் அறிவியல் முறையில் அமைந்த இலக்கண நூலாகத் தொல்காப்பியமும் திகழ்ந்தது.

தொன்மை:

திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது, தமிழ்.  சில திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாய் விளங்குவது, தமிழ்.  காலந்தோறும் தமிழ் மொழியிலிருந்து கிளைத்து வளர்ந்த பிற திராவிட மொழிக்கூறுகளை, அவைகளின் படிநிலை வளர்ச்சி போக்குகளை, ஒப்பிட்டு ஆராயத் தமிழே துணைநிற்கிறது.

பிறமொழித் தாக்கமின்மை:

திராவிட மொழிகளுள் பிறமொழிகளின் தாக்கம் குறைவாக அமைந்த மொழி, தமிழ்மொழி.  அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டது.  

கல்வெட்டு மொழி

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளில் பெரும்பான்மையானவை, தமிழ்க் கல்வெட்டுகளே.  இவை, பிற திராவிட மொழிகளுடன் ஒப்பிடத்துணை செய்கின்றன.

முடிவுரை

தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்கினாலும், தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி.  தமிழ்மொழி மூலத் திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப்பாதுகாத்து வருகிறது.  இத்தகைய காரணங்களால், திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந் துணையாக இருக்கிறது.