இயல் 1 கவிதைப்பேழை
தமிழ்விடு தூது
குறுவினா
1) கண்ணி என்பதன் விளக்கம் யாது?
கண்ணி:
1) இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.
2) அதேபோல், தமிழில் இரண்டிரண்டு அடிகளுடன் எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
நெடுவினா
தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
தமிழ்விடு தூது
தூதிற் சிறந்த தமிழே!
முன்னுரை
தமிழ்விடு தூது, மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, தகுதி ஆகியன 'தூது அனுப்பத் தமிழே சிறந்தது' என்பதற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
தமிழின் இனிமை
இனிக்கும் தெளிந்த அமுதமாய், அந்த அமிழ்தினும் மேலான முத்தி ஆகிய விடுதலை தரும் கனியே! இயல், இசை, நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே!
பாச்சிறப்பு
தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர். பிறர் படிக்கும் வகையில் நீ அவற்றைக் கொண்டிருக்கிறாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகை பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?
பாவின் திறம் அனைத்தும் கைவரப் பெற்று என்றுமே 'சிந்தா மணியாய்' இருக்கும் உன்னைச் 'சிந்து' என்று கூறிய நா இற்று விழும் அன்றோ?
தகுதிகள்
பத்துக்குணங்கள்:
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம், ராசசம் தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய்.
நூறு வண்ணங்கள்
மனிதனால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக 100 வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.
ஒன்பது சுவைகள்
நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் 9 சுவைகளைப் பெற்றுள்ளாய்.
எண்வகை அழகுகள்
தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று. நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய்.
முடிவுரை
குற்றமில்லாத பத்துக் குணங்களையும், ஒன்பது சுவைகளையும், வண்ணங்கள் நூறையும், அழகுகள் எட்டையும் பெற்றுள்ள காரணத்தால், தமிழே 'தூது' அனுப்பத் தகுதி வாய்ந்தது என்பது உய்த்துணரத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக