சனி, 27 பிப்ரவரி, 2021

நெடுவினா- இயல் 3- பண்பாடு

பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

பண்பாட்டுக் கூறுகளைப் பேணுவோம் !

முன்னுரை:

"தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்கிறார் நாமக்கல் கவிஞர்.  அத்தகைய தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.  சீரிய சிந்தனைகளையும் உயர்ந்த எண்ணங்களையும் கொண்ட தமிழர் பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழரின் பண்பாட்டுக் கூறுகள்:

1) விருந்தோம்பல்

2) ஈகைச் சிறப்பு 

3) போர் அறம்

4) புறமுதுகு காண விரும்பாத வீரச் சிறப்பு

5) வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை

6) பண்பாட்டை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கலைகள்

7) பண்பாட்டை உணர்த்தும் நாட்டுப்புறப் பாடல்கள்


பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்கள்:

1) தமிழர்தம் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஓவியம், நாட்டியம், இசை ஆகிய கவின்கலைகளை ஆதரித்துப் போற்ற வேண்டும்.

2) நமது மரபுக் கலைகளைப் பரப்பவும் அழிந்து வரும் கலை வடிவங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்கவும், இக்கலைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

3) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தொல்பொருள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, தொன்மைச் சிறப்பைப் பறைசாற்றும் கலைப்பொருட்களைக் கண்டெடுத்து, தொல்லியல் அருங்காட்சியகங்கள் பேணப்பட வேண்டும்.

4) புதிய கலைஞர்களை ஊக்குவித்தல், இளம் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்தல், கலை விழாக்கள் நடத்துதல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5) நிகழ்த்துக் கலைகளை நடத்துபவர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

6) தமிழர்தம் பண்பாட்டுக்கூறுகள் ஆவணமாக்கப்பட வேண்டும்.

7) சுற்றுலாக்களில் தமிழர்தம் பண்பாட்டை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

8) இளந்தலைமுறையினர் தமிழ்ப்பண்பாட்டுச் சிறப்பினை உணர்ந்து போற்றிப் பின்பற்ற ஏதுவாக, கல்விக்கூடப் பாடத்திட்டத்தில் அவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

9) திருவிழாக்களில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீரவிளையாட்டுகள் நடத்தப்பட வேண்டும்.

முடிவுரை:

யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், செல்வத்துப் பயனே ஈதல், பிச்சை புகினும் கற்கை நன்றே, மானமே பெரிது, ஒழுக்கமே உயர்வு போன்ற உலகில் எங்கும் காண முடியாத உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள் நாம். அத்தகைய பண்பாட்டை நம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக