வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

கடிதம்- கால் முளைத்த கதைகள்

 கடிதம் எழுதுக.

இயல் 1


உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்"என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.



நண்பனுக்குக் கடிதம் 


1, வள்ளுவர் தெரு,

சங்கரலிங்கபுரம்.

20-02-2021.


அன்புள்ள நண்பா/தோழி,


     நலம். நலமறிய ஆவல். கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாள் பரிசாக, நீ அனுப்பிய, எஸ்.இராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்" என்னும் நூலைச் சுவைத்து மகிழ்ந்தேன். அந்நூல் குறித்த கருத்துகளைஉன்னிடம் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன்.

     இயற்கையின் ரகசியங்களைக் கேள்விகள் ஏதுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.  அப்படிப்பட்ட ரகசியங்களைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்கிறது, "கால் முளைத்த கதைகள்" என்னும் நூல்.  இக்கதைகள் கற்பனைத் திறனைக் கூட்டுகின்றன. வானவில்லின் வண்ணங்கள் கொண்டு பூக்கள் நிறம் பெற்ற கதை, காதல் கொண்ட காதலனும் காதலியும், பூவும் வண்டுமாய் மாறிய கதை, கன்னிப்பெண்கள் பனைமரமாய் மாறிய கதை, பாம்புகள் தென்னை மரமாய் மாறிய கதை போன்றவை விரிந்த சிந்தனையைத் தூண்டுகின்றன.

     50க்கும் மேற்பட்ட நாடோடிக் கதைகள் கொண்ட இத்தொகுப்பில், உப்பு மற்றும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு உருவானதற்குச் சொல்லப்படும் கதைகளை மிகவும் ரசித்தேன்.  வியாபாரி ஒருவனின் பேராசையால் உப்பு தருவிக்கும் எந்திரம் கடலில் மூழ்கி, அதை நிறுத்த மந்திரம் தெரியாததால் இன்றும் கடல் உப்பு தன்மை கொண்டுள்ளதாய்ச் சொல்கிறது, குஜராத்திய பழங்குடியினக் கதை. ஒரே பெண்ணின் மீது ஆசை கொண்ட இரட்டையர்கள், அவள் மீதுள்ள காதலின் காரணமாய், எப்போதும் பிரியாதிருக்க வெற்றிலை பாக்கு சுண்ணாம்பாகப் பிறவி எடுத்ததாகச் சொல்கிறது, வியட்நாம் தேசத்துக் கதை.  நாள் முழுவதும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வர்ணங்களைத் தீட்டிய கடவுள், இறுதியாய் வந்த குயிலை வர்ணம் ஏதுமின்றி அனுப்பியதால் அது சோகத்தோடு பாடித் திரிவதாய்ச் சொல்கிறது, பீகார் பழங்குடியினக் கதை.

     அவை மட்டுமல்ல. சர்ப்பம் நதியாகவும், நதிகள் மரமாகவும், மரங்கள் கடவுளாகவும் மாறியதாய்ச் சொல்லப்படும் நம்பிக்கைகள் ஆச்சரியமூட்டுபவை.  எல்லை விரியும் கற்பனைகள் நிறைந்த இந்நூலை நீயும் சுவைத்து மகிழ இத்துடன் அனுப்பி வைக்கிறேன்.  நீ படித்து விட்டு மறக்காமல் எனக்கு மடல் எழுது. ஆவலுடன் எதிர்நோக்கும்....


அன்பு நண்பன்/தோழி,

கம்பன்


உறைமேல் முகவரி 

பெறுநர்

     தமிழரசன்

     2, கபிலர் தெரு,

     விருதுநகர்.



- மலர் மகேந்திரன்.



4 கருத்துகள்: