காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
ஒன்பதாம் வகுப்பு
இயல் 2
எறும்பு
பத்துகோடி ஆண்டுகளாய்ப்
பாரினில் இராஜ்ஜியம்..!
வேதிக்கலவை தன்னில்
விந்தையான உரையாடல்..!
சட்டத்தின் வழியில்
சமூக வாழ்க்கை..!
ஓய்வறியா உழைப்பு தன்னில்
ஒப்புமையில்லாச் சுறுசுறுப்பு..!
கால்முடிகளில் உன் காதுகள்..!
உடல்துளைகளில் உன் சுவாசம்..!
உணர்கொம்புகளில் உன் வாசம்..!
கைட்டின்ஓடே உன் கவசம்..!
மந்தைபுத்தியே உன் மகிமை..!
தனக்கொன்றும் ஊருக்கொன்றுமாய் இருவயிறுகள்..!
ஈறாறு வாரங்களே உன் வாழ்காலம்..!
இடையறா உழைப்பிலே உன் எதிர்காலம்..!
உன்னுடைய மரபணுவின் நீட்சியே நாங்கள்..!
உன் வழியே உத்தமம்..!
பின்பற்றுவோம் நித்தமும்..!!
- மலர் மகேந்திரன்.
பாடல் விளக்கம்:
எறும்புகள் 110-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், டைனோசர் காலத்திலிருந்தே தோன்றி, இன்றுவரை 22000 சிற்றினங்களாகப் பனிபடர் கண்டங்கள் தவிர்த்து உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தியுள்ளனர்.
தகவல் தொடர்பிற்காக, ஒரு வகையான, சிக்கலான வேதிப்பொருட்களை அவை பயன்படுத்துகின்றன.
எறும்புகளின் சமூகத்தில் ஒவ்வொரு எறும்புக்கும் தனித்தனியே வேலைகள் பகிர்ந்து அளிக்கப் படுகின்றன.
கடினமான வேலைகளை வாலிப எறும்புகளும் இலகுவான வேலைகளை வயதான எறும்புகளும் பகிர்ந்து கொள்கின்றன.
எறும்புகள் தங்களுடைய சட்டங்களை மதித்துக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்றன.
தேனீக்கள் போன்று சுறுசுறுப்பாக ஓய்வின்றிப் பணியாற்றுகின்றன.
எறும்புகள் தம் கால்களில் உள்ள முடி போன்ற தூவிகள் மூலம் நில அதிர்வுகளை ஒலி அதிர்வுகளாக மாற்றி ஓசையை உணர்ந்து கொள்கின்றன. காதுகள் இல்லை.
வெளிப்புற உடலில் உள்ள துளைகள் மூலம் ஆக்சிஜனை கிரகித்துக் கொள்கின்றன.
முன்பகுதியில் உள்ள உணர்கொம்புகளின் மூலம் மணத்தை அறிந்து கொள்கின்றன. அதன் மூலம் உணவுப்பொருள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கின்றன.
எறும்புகளின் வெளிப்புற உடலமைப்பு கைட்டின் என்ற கடினமான புரதத்தால் ஆனது. இது எறும்புகளுக்கு கவசமாகத் திகழ்கிறது.
சமூகத்தோடு ஒருங்கிணைந்து சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து செல்லும் சமூக ஒழுக்கமே எறும்புகளின் தனிச்சிறப்பு. அதனால் இது மந்தை புத்தி எனப்படுகிறது. மந்த புத்தி என்பது வேறு.
எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒன்று தனக்கான உணவைச் செரிப்பதற்கு. இன்னொன்று மற்ற எறும்புகளுக்கு உணவை சேகரித்து எடுத்துச் செல்வதற்கு. மனிதர்கள் யாராவது இப்படி இருப்பார்களா என்பது சந்தேகமே!
எறும்புகள் பொதுவாக 90 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை. சிலவகைக் கருப்பு எறும்புகள் 15 ஆண்டுகள் வரை வாழும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எறும்புகளில் இருந்து பல பரிமாணங்களை அடைந்து மனிதர்கள் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எறும்புகளின் சமூக ஒழுங்கு, ஒற்றுமை, உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை சிறந்த வழிகளாக இருக்கின்றன. அவை மனிதர்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவை.
இத்தகைய உயர்ந்த நெறிகளை மனிதர்களான நாங்களும் பின்பற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக