செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

தமிழோவியம் இயல் 1

 கவிதைப்பேழை

தமிழோவியம் இயல் 1



குறுவினா

1) தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

தமிழோவியம் கவிதையில் என்னை மிகவும் ஈர்த்த அடிகள்:

"மானிட மேன்மையைச் சாதித்திட குறள் மட்டுமே போதுமே ஓதி நட..."- என்ற கவிதை வரிகள், 'மனிதன்' மேன்மையான நிலையை அடையத் 'திருக்குறள்' என்ற 'உலகப்பொதுமறைநூல்' ஒன்றே போதுமானது என்பதை வலியுறுத்துகின்றன.  இது ஒரு தெளிவான சிந்தனை.  இத்தகைய, அழகிய உயர்ந்த சிந்தனையை வலியுறுத்தும் இக்கவிதை வரிகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.


2) "அகமாய் புறமாய் இலக்கியங்கள் - அவை 

 அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் " - இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

"அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்- அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்"- என்ற பாடல் அடிகளில் சொல்லப்பட்டுள்ள இலக்கியங்களின் பாடுபொருள்களாவன:

அ) அகம் 

ஆ) புறம் 


சிறுவினா

1) காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தமிழ்!

என்றென்றும் நிலைபெற்ற தமிழ் மொழியின் தோற்றம், மிகவும் தொன்மை வாய்ந்தது.

அ) உயர்குடி மக்களுக்கே கல்வி கற்கும் உரிமை இருந்த ஓலைச்சுவடிக்காலத்தில், 'அகவற்பா' யாப்பமைப்பில் தோற்றம் கொண்டிருந்து.  ஓதுவதற்கேற்ற எளிய நூற்பா வடிவில் 'சூத்திரங்கள்' சூல் கொண்டிருந்தன.

ஆ) புத்தமும் சமணமும் புகழ் பெறுங்காலத்தே புதுவகைக் 'காப்பியம்' என்றொரு 'தொடர்நிலைச் செய்யுள்' வடிவம் பூண்டது.

இ) அறம் பிறழ்ந்த இருண்ட காலத்தில் அறிவுரை வழங்க, 'வெண்பா' என்றோர் வடிவில் புத்துயிர் பெற்றது.

ஈ) பக்திமணம் பரப்பிய ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் அளவிறந்த 'இசைத்தமிழாய்' ஆட்சி கொண்டிருந்தது.

உ) மூடப் பழக்கங்களை முட்டறுக்கும் சித்தர்களின் சிந்தனை வீச்சுகளால் எளியோர் உள்ளங்களிலும் குடிகொண்டது.

ஊ) வடமொழித் தாக்கத்தின் விளைவாகத் தமிழ் 96 வகைச் சிற்றிலக்கிய வடிவங்களை ஏற்றது.

எ) அச்சகங்களின் வரவாலும் மேலைநாட்டு இலக்கியங்களின் தாக்கத்தாலும் "உரைநடை, சிறுகதை, புதினம், புதுக்கவிதை,  ஹைக்கூ" என்ற வடிவங்களை ஏற்று, உச்சநிலை பெற்றது.

ஏ) கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினித்தமிழாய், கன்னித்தமிழாய் வளர்ந்துவருகிறது.

ஐ) துறைதோறும் புதுவகைக் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற சொல்லாக்கக் கூறுகளைக் கொண்டு, பிறமொழித் துணையின்றித் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது, தமிழ்!


2) "புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்"- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பேன் !

அ) உணர்ச்சிப் பெருக்கோடும் கருத்துச் செறிவோடும் இக்காலத் தமிழ்ச்சமூகத்தைச் சீர்படுத்தும் ஹைக்கூ கவிதைகளை எழுதிக் குவிப்பேன்.

ஆ) தமிழ், தமிழர் நலத்தையே முழுமூச்சாய்க் கொண்டு புதினம் படைப்பேன்.

இ) ஆகச்சிறந்த எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் படித்துப் புகழ் பரப்புவேன்.

ஈ) தமிழர்தம் பண்பாட்டையும் வாழ்வியல் நெறிகளையும் செவ்வியல் மொழிகளில் மொழியாக்கம் செய்வேன்.

உ) துறைதோறும் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து தமிழை வளப்படுத்துவேன்.

ஊ) சங்க இலக்கியச்செங்கருத்துக்களைப் புதுக்கவிதைகளில் வடிப்பேன்.

எ) நீதிக் கருத்துக்களைக் குழந்தை இலக்கியங்களில் நிலைநாட்டுவேன்.

ஏ) ஐன்ஸ்டின் முதலானோரின் அறிவியல் கருத்துகளை அழகு தமிழில் படங்களுடன் நூல் செய்வேன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக