திங்கள், 8 பிப்ரவரி, 2021

திராவிட மொழிக்குடும்பம் உரைநடை உலகம்

 திராவிட மொழிக் குடும்பம்


குறுவினா

1) நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது?

அ) நான் பேசும் மொழி, தமிழ்.

ஆ) தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.


சிறு வினா

1) திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்புயல்புகளை விளக்குக.

திராவிட மொழிக் குடும்பம், நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அவை,

1) தென்திராவிட மொழிகள்

2) நடுத்திராவிட மொழிகள்

3) வடதிராவிட மொழிகள்.

திராவிட மொழிகளுள் எனக்குத் தெரிந்த மொழி, தமிழ்.

தமிழ்மொழியின் சிறப்பு இயல்புகள்:

1) உயிர் எழுத்துக்களில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.

2) உயிருள்ளவைகளுக்கு மட்டுமே பால் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. 

3) வினைச்சொற்கள் திணை, பால், எண், இடம் ஆகியவற்றையும் காட்டும்.

4) மிகுதியான இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும் சொல்வளமும் சொல்லாட்சியும் பெற்றள்ளது.

5) திராவிட மொழிகளுக்குத் தாய் மொழியாகத் திகழ்கிறது.


2) மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.

1) தமிழ்- மூன்று

2) மலையாளம்- மூணு 

3) தெலுங்கு- மூடு 

4) கன்னடம்- மூரு 

5) துளு - மூஜி 


நெடுவினா

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந் துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

ஒப்பியல் ஆய்விற்குத் பெருந்துணையாகும் தமிழே!


முன்னுரை

"உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு" என்ற வள்ளுவரின் வரிகள் மனிதர்களை, அவர்களின் பண்புகளைக் கொண்டே ஒப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  அதுபோலவே, மொழிகளையும் அவைகளின் தனித்தன்மைகளைப் பொறுத்தே ஒப்பிடுகிறார்கள்.  உவமைப் பொருள், எப்போதும் ஒப்புமைப் படுத்தப்படும் பொருளைவிட உயர்ந்ததாக இருக்கும். அத்தகைய, உவமைப் பொருளாக, ஒப்பியல் ஆய்வுக்குரிய கூறுகளைக் கொண்டதாக, தமிழ்மொழி இலங்குகிறது.  சிறப்புவாய்ந்த ஒப்பியல் ஆய்வுக்கூறுகளைக் காண்போம், வாரீர்! 


தமிழ்மொழியின் ஒப்பியல் ஆய்வுக்கூறுகள்:

பொதுவான அடிச்சொற்கள்

திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதை காண முடிகிறது.  திராவிட மொழிகளுள் தமிழ்மொழியில்தான் மிகுதியான வேர்ச்சொற்கள் காணப்படுகின்றன.  இவை பிற திராவிட மொழிகளில் உள்ள வேர்ச்சொற்களை ஒப்பிடத் துணைநிற்கின்றன.

தமிழில் உள்ள பல அடிச்சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன.  சுட்டுப் பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

சான்றுகள்


பொதுவான அடிச்சொற்கள்:

கண்- தமிழ்

கண்ணு- மலையாளம், கன்னடம் 

கன்னு-தெலுங்கு


பொதுவான எண்ணுப் பெயர்கள்:

1) தமிழ்- மூன்று

2) மலையாளம்- மூணு 

3) தெலுங்கு- மூடு 

4) கன்னடம்- மூரு 

5) துளு - மூஜி 

திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை:

மரம் - தமிழ், மலையாளம், கன்னடம் 

மானு- தெலுங்கு


பழமையான இலக்கிய இலக்கணங்கள்

திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகவும் தொன்மை வாய்ந்தது.  தமிழ்மொழியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே உயர்தரச் செவ்வியல் இலக்கியங்களாகச் சங்க இலக்கியமும் அறிவியல் முறையில் அமைந்த இலக்கண நூலாகத் தொல்காப்பியமும் திகழ்ந்தது.

தொன்மை:

திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது, தமிழ்.  சில திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாய் விளங்குவது, தமிழ்.  காலந்தோறும் தமிழ் மொழியிலிருந்து கிளைத்து வளர்ந்த பிற திராவிட மொழிக்கூறுகளை, அவைகளின் படிநிலை வளர்ச்சி போக்குகளை, ஒப்பிட்டு ஆராயத் தமிழே துணைநிற்கிறது.

பிறமொழித் தாக்கமின்மை:

திராவிட மொழிகளுள் பிறமொழிகளின் தாக்கம் குறைவாக அமைந்த மொழி, தமிழ்மொழி.  அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டது.  

கல்வெட்டு மொழி

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளில் பெரும்பான்மையானவை, தமிழ்க் கல்வெட்டுகளே.  இவை, பிற திராவிட மொழிகளுடன் ஒப்பிடத்துணை செய்கின்றன.

முடிவுரை

தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களை நீக்கினாலும், தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி.  தமிழ்மொழி மூலத் திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப்பாதுகாத்து வருகிறது.  இத்தகைய காரணங்களால், திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந் துணையாக இருக்கிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக