செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

பெரிய புராணம்

 பெரியபுராணம்




குறுவினா

நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

வானவில் காட்சி 

அ) அகன்ற படிக்கட்டுகளை உடைய குளத்தில் அன்னப் பறவைகள் ஆடுகின்றன.

ஆ) எருமைகள் விழுந்து மூழ்கிக் குளத்து நீரைக் கலங்கச் செய்கின்றன.

இ) கலங்கிய நீரில், இளம் வாளை மீன்கள் பாக்கு மரங்களின் மீது துள்ளிப் பாய்கின்றன.

ஈ) இக்காட்சி, நிலையான வானத்தில் தோன்றும் வானவில் போல இருக்கிறது.


நெடுவினா

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

திருநாட்டுச் சிறப்பு

முன்னுரை:

நாடெல்லாம் நீர் நாடாகத் திகழும் காவிரியின் பூவிரியும் கோலத்தைப் பெரியபுராணம் விவரிக்கிறது. திருநாட்டின் நீர்வளத்தையும் இயற்கை வளத்தையும் காண்போம், வாரீர்.

காவிரி ஆற்றுச் சிறப்பு:

மலையிலிருந்து காவிரியாறு ஓடிவருகிறது. தேன் ஒழுகும் மலர்கள்நிறைந்த குளத்தில் பாய்ந்து, மலர்களைக் கலைக்கிறது. அதனால், வண்டுகள் எழுந்து ஆரவாரம் செய்கின்றன.  வாய்க்கால்கள் வழியாக எல்லா இடங்களிலும் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகிறது.

களையெடுக்கும் உழத்தியர் 

நட்டு வைத்த நெல் நாற்றின் முதல் குருத்தின் சுருள் விரியக்கண்ட உழவர்கள், களையெடுக்கும் பருவத்தைச் சுட்டினர். களை எடுக்கும் பெண்களின் கால்களில் சங்குகள் மிதிபடுவதால், தடுமாறி, இடைசாய்ந்து மெல்ல நடக்கும்போது, கூந்தல் சரிய, அவற்றை மொய்த்திருக்கும் வண்டுகள் கலைந்தன.

நாடெல்லாம் நீர்நாடு 

காடுகளில் எங்கும் பருத்த கரும்புகள், சோலைகளின் சிறு கிளைகளில் எல்லாம் அரும்புகள், எங்கும் கருங்குவளை மலர்கள், வயல்களில் எல்லாம் சங்குகள் காணப்படுகின்றன. சோழ நாட்டிற்கு ஈடு இல்லாத வகையில், நாடே நீர்நாடாகக் காட்சியளிக்கிறது.


வானவில் காட்சி:

அகன்ற படிக்கட்டுகளை உடைய குளத்தில் அன்னப் பறவைகள் ஆடுகின்றன. எருமைகள் குளத்தில் மூழ்கி விளையாடுகின்றன. இளம் வாளை மீன்கள் பாக்கு மரங்களின் மீது துள்ளிப் பாய்கின்றன. இக்காட்சியை வானவில் போல இருக்கிறது.

மலைகளை ஒத்த வளங்கள்

நெற்கதிர்களைக் கட்டுகளாக அடுக்கி அடுக்கி மலையாகச் சேர்த்து வைப்பர். பலவகையான மீன்களைப் பிடித்து நெடுங்குன்றம் செய்வர். முத்துக்களை மலையாகக் குவித்து வைப்பர். தேன் சிந்தும் மலர்க்கட்டுகளை மலையாகக் குவித்து வைப்பர்.

மலைசூழும் மேகக்காட்சி 

மலைபோலக் குவித்து வைக்கப்பட்டுள்ள நெற்கதிர்க் கட்டுகளைச் சரியச் செய்வர். கரிய பருத்த எருமைகள் அவற்றை வட்டமாக மிதிக்கும். இக்காட்சி, மலை உச்சியை வலமாகச் சூழும் கருமேகம் போன்று இருக்கும். இதுபோன்ற காட்சிகள் அங்கே அதிகமாகத் தோன்றும்.

பல்வகை மரங்கள் 

தென்னை மரம், செருந்தி மரம், நரந்த மரம், அரசமரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குரா மரம், பனைமரம், சந்தன மரம், நாகமரம், வஞ்சிமரம், காஞ்சி மரம், கோங்குமரம் முதலியன எங்கும் செழித்து வளர்ந்திருக்கின்றன.

முடிவுரை

'நீர் இன்றி அமையாது உலகு' என்ற வள்ளுவரின் வரிகளை மனத்தில் இருத்தி, நீர்நிலைகளை அமைத்து, திருநாடு போல் நம் நாட்டையும் வளம் அடைய செய்ய வேண்டிய பொறுப்புடன் கடமை ஆற்றுவோமாக!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக