வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஏறு தழுவுதல், இயல் 3

 ஏறு தழுவுதல், இயல் 3



குறுவினா 

1) நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

நான் வாழும் பகுதி, விருதுநகர். இப்பகுதியில் ஏறு தழுவுதல்,

அ) சல்லிக்கட்டு

ஆ) மஞ்சுவிரட்டு

இ) மாடுபிடித்தல் 

ஈ) மாடுவிடுதல் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.


2) ஏறு தழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.

ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்கள்:

அ) ஏறுகோள் (சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை)

ஆ) எருதுகட்டி (கண்ணுடையம்மன் பள்ளு)


3)  ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

தொல்லியல் சான்றுகள்

அ) சேலம் மாவட்டம் - கருவந்துறை நடுகல் 

ஆ) நீலகிரி மாவட்டம் - கரிக்கையூர் பாறை ஓவியம் 

இ) மதுரை மாவட்டம் - கல்லூத்து மேட்டுப்பட்டிக் காளை ஓவியம்

ஈ) தேனி மாவட்டம்-  சித்திரக்கல்புடவு காளை ஓவியம்.


சிறுவினா 

1) வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக. 

பண்பாட்டு அடையாளம்

அ) முல்லை நில மக்கள் கால்நடைகளை வளர்த்தனர்.

ஆ) மருதநில மக்கள் கால்நடைகளை வேளாண் உற்பத்தித் தொழிலில் பயன்படுத்தினர்.

இ) பாலைநில மக்கள் கால்நடைகளைப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தினர்.

ஈ) வேளாண்மைக்குத் துணைநின்ற மாடுகளுக்கு நன்றி கூறவே மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உ) மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து, ஊட்டி விடுவர்.

ஊ) இப்பண்பாட்டின் தொடர்ச்சியாக மாடுகளுடன் விளையாடி மகிழும் மரபு உண்டானது.  இதுவே, பின்னர் ஏறு தழுவுதல் என்னும் பண்பாடாக மலர்ந்தது.

ஊ) சல்லி நாணயங்களை மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கத்தால் சல்லிக்கட்டு என்னும் பெயர் உண்டானது.


2) ஏறு தழுவுதல், திணை நிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருக்கிறது?

திணைநிலை வாழ்வில் ஏறு தழுவுதல்:

அ) முல்லை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் ஆயர்கள், ஆடுமாடுகளுடன் உறவாடி மகிழ்கின்றனர். தம் உறவினர்களை அழைப்பது போலச் செல்லப் பெயர் வைத்து அழைக்கின்றனர். சுவையான உணவுப்பண்டங்களை மாடுகளுக்குப் பகிர்ந்தளித்து மகிழ்கின்றனர். 

ஆ) மருதநில வேளாண் குடிகள், வேளாண்மைக்குத் துணைநின்ற கால்நடைகளுக்குப் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக 'ஏறு தழுவுதல்' என்னும் வீர விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்குபெறும் காளைகளுக்கு உரிய மரியாதைகளுடன் வழிபாடு செய்யப்படும்.  

இ) பாலைநில மக்கள் காளைகளை வண்டியில் பூட்டி போக்குவரத்திற்காகப் பயன்படுத்தினர்.


நெடுவினா

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்

முன்னுரை:

வீரத்திற்கும் விளைச்சலுக்கும் உழைப்பிற்கும் செல்வத்திற்கும் அடையாளப்படுத்தப்படுபவை, மாடுகள். முல்லை, மருத நிலங்களில் கால்கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பண்பாடாகியுள்ளது, ஏறு தழுவுதல்.  ஏறு தழுவுதல் தமிழரின் நாகரித்தை உணர்த்தும் விளையாட்டு; வீரத்தைப் பெருமிதப்படும் பண்பாட்டு நிகழ்வு; தமிழர்தம் அடையாளம்!

தமிழர்தம் வீரத்தின் விளைநிலம்:

ஏறு தழுவுதல், தமிழர்தம் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. காளையை அடக்கும் வீரமகனையே ஆயர்குலப்பெண் மணம் புரிவாள். ஏறு தழுவுதலில் காயம்பட்டு இறந்த வீரனுக்கு நடுகல் எடுக்கும் வழக்கமும் இருந்தது.

பண்பாட்டு அடையாளம்:

முல்லை நில மக்களின் வாழ்வாதாரமாகவும், மருதநில வேளாண் உற்பத்திக்குத் துணையாகவும், பாலைநிலப் போக்குவரத்திற்கு ஆதாரமாகவும் காளைகள் விளங்கின.

ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்:

மேலை நாடுகளில் குறிப்பாக, ஸ்பெயின் நாட்டில் காளைகளைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். ஆட்டத்தின் முடிவில் காளைகள் கொல்லப்படுவதும் உண்டு. அவ்விளையாட்டு மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவது போலிருக்கின்றது.  

ஆனால், தமிழரின் ஏறு தழுவுதல் அறம் சார்ந்தது. ஏறு தழுவுதலுக்கு முன்பும் பின்பும் காளைகளுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தற்காலங்களில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளும், சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதற்கு முன் காளைகளுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. காளைகளைத் துன்புறுத்துவதும் காளைகளுக்கு ஊக்க மருந்து கொடுப்பதும் நீதிமன்ற உத்தரவின்படி, தடை செய்யப்பட்டுள்ளது. காயம்பட்ட வீரர்களுக்கும் காளைகளுக்கும் உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிடிபடும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.  அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

முடிவுரை:

பண்டைய வீரவுணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.  நம் முன்னோரின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக