இடைச்சொல்
பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் சார்ந்து இயங்கும் சொற்கள் இடைச் சொற்கள் ஆகும். இடைச்சொற்கள் தனித்து இயங்கா.
இடைச்சொற்கள் இல்லையென்றால், தொடரின் பொருளை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது. இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக ஆக்குகின்றன.
இடைச்சொற்கள் எட்டு வகைப்படும்.
1) வேற்றுமை உருபுகள்
2) திணை, பால், எண், இடம் காட்டும் வினைச்சொல் விகுதிகள்.
3) சாரியை
4) உவம உருபுகள்
5) தத்தம் பொருளை உணர்த்தும் சொற்கள்
6) இசைநிறைச் சொற்கள்
7) அசைநிலைச் சொற்கள்
8) அச்சம், விரைவு -இவற்றைக் குறிக்கும் குறிப்புச் சொற்கள்
இதுபோல பலவாகவும் அமையும்.
இடைச்சொற்களின் வகைகள்:
1) வேற்றுமை உருபுகள்:
(ஐ, ஆல், கு, இன், அது, கண்)
அ) அவன்+ஐ=அவனை;
ஆ) அவன்+ஆல்=அவனால்;
இ) அவன்+கு=அவனுக்கு;
ஈ) அவன்+இன்=அவனின்;
உ) அவன்+ அது=அவனது;
ஊ) அவன்+ கண்= அவன்கண்
2) பன்மை விகுதிகள்:
கள்- புத்தகங்கள், விழாக்கள், நன்மைகள்;
மார்- அண்ணன்மார், அக்காமார், தம்பிமார், தங்கைமார்;
3) திணை, பால் காட்டும் விகுதிகள்:
ஏன்- வந்தேன் (உயர்திணை தன்மை ஒருமை வினைமுற்று)
ஓம்- வந்தோம் (உயர்திணை தன்மை பன்மை வினைமுற்று)
ஆய்- வந்தாய் (உயர்தினை முன்னிலை ஒருமை வினைமுற்று)
ஈர்-வந்தீர் (உயர்திணை முன்னிலை ஒருமை வினைமுற்று)
ஈர்கள்- வந்தீர்கள் (உயர்தினை முன்னிலை பன்மை வினைமுற்று)
ஆன்- வந்தான் (உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று)
ஆள்- வந்தாள்-(உயர்திணை பெண்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று)
ஆர்- வந்தார்( உயர்திணைப் பலர்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று)
அர்- வந்தனர் (உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்று)
ஆர்கள்- வந்தார்கள் ( உயர்திணைப் பலர்பால் படர்க்கை பன்மை வினைமுற்று)
து-வந்தது-(அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று)
அ- வந்தன- (அஃறிணை பலவின்பால் படர்க்கைப் பன்மை வினைமுற்று)
3) கால இடைநிலைகள்:
அ) இறந்தகால இடைநிலைகள்:
த், ட், ற், ன், இன்
த்- வந்தான்- வா(வ)+த்(ந்)+த்+ஆன்
ட்- கேட்டான்- கேள்(ட்)+ ட்+ஆன்
ற்- வென்றான்- வெல்(ன்)+ற்+ஆன்
இன்- நடத்தினான்-நடத்து+இன்+ஆன்
ஆ) நிகழ்கால இடைநிலைகள்:
கிறு கின்று ஆநின்று
கிறு- படிக்கிறான்- படி+க்+கிறு+ஆன்
கின்று- படிக்கின்றான்- படி-க்+கின்று+ஆன்
ஆநின்று- படிக்காநின்றான்-படி+க்+க்+ஆநின்று+ஆன்
இ) எதிர்கால இடைநிலைகள்:
ப், வ்
ப்- படிப்பான்- படி+ப்+ப்+ஆன்
வ்- செய்வான்- செய்+வ்+ஆன்
ஈ) எதிர்மறை இடைநிலைகள்:
ஆ, அல்,இல்
ஆ- படியாமை-படி+ய்+ஆ+மை
அல்- செய்கலன்-செய்+க்+அல்+அன்
இல்- செய்திலன்-செய்+த்+இல்+அன்
4) பெயரெச்ச விகுதி:
அ- பாடிய- பாடு+ய்+அ
5) வினையெச்ச விகுதிகள்:
அ,இ,உ,மல்
அ-பாட-பாடு+அ
இ-பாடி- பாடு+இ
உ- படித்து-படி+த்+த்+உ
மல்- படிக்காமல்- படி+க்+க்+ஆ+மல்
6) தொழிற்பெயர் விகுதிகள்:
தல், அம், மை
தல்- வாழ்தல்- வாழ்+தல்
அம்- விருப்பம்- விருப்பு+அம்
மை- ஆளுமை- ஆள்+மை
7) வியங்கோள் வினைமுற்று விகுதிகள்:
க, இய, இயர்
க- வாழ்க-வாழ்+க
இய-வாழிய- வாழ்+இய
இயர்- வாழியர்- வாழ்+இயர்
8) சாரியைகள்:
அத்து, அற்று, அம்
அத்து- மரத்தின்- மரம்+அத்து+இன்
அற்று- எல்லாவற்றையும்- எல்லாம்+அற்று+ஐ+உம்
9) உவம உருபுகள்:
போல, மாதிரி...
போல- அவனைப்போல
மாதிரி- அவனைமாதிரி
10) இணைப்பிடைச் சொற்கள்:
உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்......
உம்-அவனும் வந்தான்
அல்லது- அது அல்லது இது
இல்லையென்றால்-
அது இல்லையென்றால் இது...
ஆனால்-
அவன் முயன்று படித்தான். ஆனால் தேர்வில் தோல்வியுற்றான்
ஓ-
ஓ ஓ அவனா?
ஆகவே-
ஒழுக்கம் உயர்வு தரும். ஆகவே ஒழுக்கத்தை விரும்பிக் காக்க வேண்டும்.
ஆயினும்-
விருப்பம் இல்லை... ஆயினும் செய்கிறேன்.
எனினும்-
தோல்வி அடைந்தேன்... எனினும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
சொல்லுருபுகள்:
மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை...
மூலம்- ஊடகங்கள் மூலம்...
கொண்டு- அறிவின் துணை கொண்டு...
இருந்து- விண்ணில் இருந்து....
பற்றி- நன்மை தீமை பற்றி...
வரை- உரிய காலம் வாய்க்கும் வரை....
11) வினா உருபுகள்:
ஆ, ஓ
ஆ- அவனா?
ஓ- அவனோ?
12) தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்:
தற்காலத் தமிழில் உம் ஓ ஏ தான் மட்டும் ஆவது கூட ஆ ஆம் ஆகிய இடைச் சொற்கள் மிகுதியாக பயன்படுத்தப்படுகின்றன.
அவன்+உம்=அவனும்
அவன்+ஓ=அவனோ ?
அவன்+ஏ= அவனே
அவன்+ தான்= அவன்தான்
அவன்+ மட்டும்= அவன்மட்டும்
அவன்+ஆவது=அவனாவது
அவன்+கூட= அவன்கூட
அவன்+ ஆ= அவனா?
அவன்+ஆம்= அவனாம்
உம்
உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு , ஐயம் ,எச்சம், முற்று, அளவை , தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.
எதிர்மறை: எதிர்மறை உம்மை
மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை-எதிர்மறை உம்மை
பலமுறை படித்தும் ஞாபகம் இல்லை
மேகங்கள் கூடியும் மழை பெய்யவில்லை...
சிறப்பு: சிறப்பும்மை-
பாடகர்களும் போற்றும் பாடகர்...
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்...
ஐயம்: ஐயவும்மை
அவனும் படித்தானா? இல்லையா?
எச்சம்- எச்சவும்மை:
உலகம் யாவையும்....
முற்று- முற்றும்மை:
எப்போதும்...
அளவை- எண்ணும்மை:
தாயும் தந்தையும்...
பத்தாயினும் எட்டாயினும் வேண்டும்...
தெரிநிலை- தெரிநிலை உம்மை:
ஆணும் அன்று; பெண்ணும் அன்று
பேடி என்பதைத் தெரிவிக்கிறது.
ஆக்கம்- ஆக்கவும்மை:
தஞ்சாவூர் நகரும் ஆயிற்று...
இதற்கு முன்பு கிராமமாக இருந்தது...